Aavin/பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பிடித்த ஆவின் நெய் பாட்டில்.. அரசு ஆர்டரை அலேக்காக தூக்கிய ஆவின்.!

By Asianet TamilFirst Published Nov 23, 2021, 9:22 PM IST
Highlights

ஆவின் மூலம் தைத் திருநாளாம் பொங்கலுக்கு 100 மி.லி. அளவில் மொத்தம் 2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. 

பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பரிசு தொகுப்பில் இடம் பெற்றுள்ள நெய் பாட்டிலை வழங்கும் ஆர்டர் ஆவினுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு ஆர்டரை வெளி இனிப்பு நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கி, அதன்மூலம் கமிஷன் பார்க்க போக்குவரத்துத் துறை தலைமை திட்டமிட்டதாக சர்ச்சை எழுந்தது. ரூ. 100 கோடி விற்று முதல் லாபம் காட்டிய இனிப்பு நிறுவனத்துக்குத்தான் ஆர்டர் என்று டெண்டர் விதிமுறை திருத்தப்பட்டது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து தீபாவளி இனிப்பு ஆர்டரை அரசு நிறுவனமான ஆவினுக்கு வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இதுதொடர்பாக துறைத் தலைவர்களுக்குக் கடிதம் எழுதினார்.

இதனையடுத்து எப்போதும் இல்லாத அளவுக்கு தீபாவளி இனிப்பு விற்பனையில் ஆவின் புதிய சாதனைப் படைத்தது. ரூ.83 கோடிக்கு தீபாவளி இனிப்பு விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்நிலையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு 20 வகையான பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் 100 கிராம் நெய்யும் அடங்கும். சுமார் 2.15 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ள நிலையில், அந்த ஆர்டரும் ஆவினுக்கே வழங்கப்பட்டுள்ளது.      

இந்நிலையில் இதுகுறித்து ஆவின் நிர்வாகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “தமிழக முதல்வர் தமிழக மக்களின் தேவை அறிந்து அரசின் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அவரின் உத்தரவுப்படியும், பால்வளத்துறை அமைச்சர் ஆலோசனைப்படியும் ஆவின் நிறுவனமானது வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 2022-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை அறிவித்தார். அதில் ஆவின் சார்பாகத் தயார் செய்யப்படும் நெய்யும் இடம் பெற்றுள்ளது என்பது வரவேற்கத்தக்கது.

விவசாயிகள், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியையும் அன்றாட வாழ்வாதாரத்திற்குப் பயன்படும் தொழிலாகக் கருதுகின்றனர். இந்தியா ஒரு விவசாய நாடு என்றால் அதில் முதலிடம் பால் வளத்திற்குத்தான் உள்ளது. ஆவின் மூலம் தைத் திருநாளாம் பொங்கலுக்கு 100 மி.லி. அளவில் மொத்தம் 2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இது உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின்படி சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது. ஆவின் நெய் விற்பனை மூலம் தோராயமாக ரூ.135 கோடி வருமானம் கிடைக்க உள்ளது. மாவட்டக் கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள 19 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் அதாவது கால்நடை விவசாயிகள் பயன்பெறுவர்." என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

tags
click me!