திமுகவுக்கு அடுத்து பாஜக ‘வலிமை’யான கட்சியா.? அண்ணாமலை ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசியா.? கி.வீரமணி கிண்டல்.!

By Asianet TamilFirst Published Nov 23, 2021, 8:28 PM IST
Highlights

"இவர் பா.ஜ.க.வின் தலைவரா? அல்லது எதிர்க்கட்சியினருக்கும், விவசாயிகளுக்கும் உதவும் ‘அனுகூல சத்ருவா?’ என்று கேட்கவே தோன்றுகிறது!”

தமிழ்நாடு பாஜக தலைவர் வேளாண் சட்டங்களின் சிறப்புகளை சிலாகித்துப் பேசியதோடு, மீண்டும் வேறு ரூபத்தில் மூன்று வேளாண் சட்டங்களும் வரும் என்று பேட்டி கொடுத்து, ‘ராஜவை மிஞ்சிய ராஜவிசுவாசியாக’ காட்டி, தனது பதவியை ஆடாமல் பார்த்துக் கொள்கிறார் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க அதன் புதிய தலைவர் அண்ணாமலை திசை தெரியாமல் திக்குமுக்காடுகிறார்; தெளிவற்ற அவரது பேச்சுகளுக்கு சில ஏடுகள் விளம்பரம் கொடுத்தாலும், அவை விழலுக்கிறைத்த நீராகவே ஆவது உறுதி! திமுகவுக்கு அடுத்து பாஜகதான் தமிழ்நாட்டில் வலிமையுள்ள கட்சியாக வரும் என்று தனது ஆசையை வெளியிட அவருக்கு உரிமை உண்டு என்றாலும், யதார்த்தம் அவருக்குக் கைகொடுத்து நிற்கவில்லையே! அதை யோசிக்க வேண்டாமா? ஆனால், தமிழ்நாட்டு மக்கள் புரிந்துள்ளார்கள்.

மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி, திரும்பப் பெறுவதாக திடீர் அறிவிப்புக் கொடுத்ததை - மனமாற்றம் என்பது அச்சட்டத்தில் உள்ள விவசாய விரோத அம்சங்களை உணர்ந்ததால் அல்ல. மாறாக, அடுத்து வரும் 5 மாநில தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடையக் கூடும் என்ற அச்சத்தாலும், அரசியலில் ஏற்பட்ட பெகாசஸ் உச்சநீதிமன்ற விசாரணை ஆணை, ரஃபேல் விமான பேரத்தில் புதிதாக வெளிவந்துள்ள பல தகவல்கள் - இப்படிப் பல கடுமையான விமர்சனங்கள், காரணங்கள் என ஏடுகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன! விவசாயிகளோ, பிரதமரின் மன்னிப்பைவிட, உருப்படியான, ஏற்கத்தகுந்த அறிவிப்புதான் எங்களுக்கு முக்கியம்; நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை; வரும் நவம்பர் 29-ஆம் தேதி டெல்லியில் பெரிய பேரணியை நடத்திடுவோம் என்று கூறுகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் வேளாண் சட்டங்களின் சிறப்புகளை சிலாகித்துப் பேசியதோடு, மீண்டும் வேறு ரூபத்தில் மூன்று வேளாண் சட்டங்களும் வரும் என்று பேட்டி கொடுத்து, ‘ராஜவை மிஞ்சிய ராஜவிசுவாசியாக’ காட்டி, தனது பதவியை ஆடாமல் பார்த்துக் கொள்கிறார் போலும்! சந்தேக மேகங்கள் - விவசாயிகள் மத்தியில் திரண்டுள்ள நிலையில், இப்படி இவர் பேசுவது, இவர் பா.ஜ.க.வின் தலைவரா? அல்லது எதிர்க்கட்சியினருக்கும், விவசாயிகளுக்கும் உதவும் ‘அனுகூல சத்ருவா?’ என்று கேட்கவே தோன்றுகிறது!” என்று அறிக்கையில் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
 

click me!