’நான் உயிரோடு இருப்பது பா.ஜ.க.வுக்குப் பிடிக்கவில்லை’...அர்விந்த் கெஜ்ரிவால்...

By Muthurama LingamFirst Published May 6, 2019, 9:10 AM IST
Highlights

‘இத்தோடு என்னை 9 முறை தாக்கிவிட்டார்கள். நான் உயிரோடு இருப்பது பா.ஜ.க.வுக்குப் பிடிக்கவில்லை’என்கிறார் நேற்று முன் தினம் பிரச்சாரத்தின் கடுமையான தாக்குதலுக்கு ஆளான அர்விந்த் கெஜ்ரிவால்.
 

‘இத்தோடு என்னை 9 முறை தாக்கிவிட்டார்கள். நான் உயிரோடு இருப்பது பா.ஜ.க.வுக்குப் பிடிக்கவில்லை’என்கிறார் நேற்று முன் தினம் பிரச்சாரத்தின் கடுமையான தாக்குதலுக்கு ஆளான அர்விந்த் கெஜ்ரிவால்.

டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கு ஆறாம் கட்ட வாக்குப்பதிவு, மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். மே 4ஆம் தேதி மாலை டெல்லியில் உள்ள மோதி நகரில் மக்களிடம் வாக்கு கேட்டு திறந்தவெளி வாகனத்தில் அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, சுரேஷ் என்ற நபர் திடீரென பிரச்சார வாகனத்தின் மீது ஏறி அரவிந்த் கெஜ்ரிவாலின் கன்னத்தில் பலமாக அறைந்தார். அவரை உடனே வளைத்துப் பிடித்த ஆம் ஆத்மி தொண்டர்கள் பதிலுக்கு அவரை நையப்புடைத்து போலீஸில் ஒப்படத்தனர்.

இதுகுறித்துப் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “நேற்று ஒருவர் என்னைத் தாக்கினார். இது கடந்த ஐந்து ஆண்டுகளில் என் மீது நடத்தப்பட்ட ஒன்பதாவது தாக்குதலாகும். முதல்வரான பிறகு மட்டும் ஐந்து முறை தாக்கப்பட்டுள்ளேன். இதுபோல பலமுறை எந்த முதல்வரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்க மாட்டார் என்று கருதுகிறேன்.

எதிர்க்கட்சிகளின் கையில் முதலமைச்சரின் பாதுகாப்பு இருக்கும் ஒரே பகுதி டெல்லிதான். என்னுடைய பாதுகாப்பு என்பது பாஜகவுடைய பொறுப்பு. மற்ற எல்லா மாநிலங்களிலும் முதலமைச்சரின் பாதுகாப்பு, காவல் துறையின் கைகளில் இருக்கும். காவல் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆம் ஆத்மியை அழிக்க பாஜக தன்னாலான சிறப்பான முயற்சிகளைச் செய்து வருகிறது.

2015ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை வென்றதை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை. என்னுடைய அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தினார்கள். டெல்லி காவல் துறை என் வீட்டில் சோதனை நடத்தியது. 33 வழக்குகள் என் மீது பதிவு செய்திருக்கிறார்கள். என் உயிரையும் எடுக்க விரும்புகிறார்கள். இது என் மீது நடத்தப்பட்டது தாக்குதல் அல்ல; டெல்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மீது நடத்தப்படும் தாக்குதல். கல்வி, சுகாதாரம், மின்சாரம், தண்ணீர் வசதிகள் எனப் பல வேலைகளை நாங்கள் மக்களுக்குச் செய்து கொடுத்துள்ளோம். ஆனால், அவர்கள் (பாஜக) என்ன செய்தார்கள் என்று மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற பயம் அவர்களுக்கு வந்துவிட்டது” என்றார்.

இத்தனை முறை தாக்குதல் நடந்தும் இந்திய முதல்வர்களிலேயே பிரத்யேக பந்தோபஸ்துகள் எதுவுமின்றி எளிமையாக அணுகக் கூடிய முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!