தலைதூக்கும் உட்கட்சி பிரச்னை... ஒதுங்கிய மாஜி எம்.எல்.ஏ... திருப்பரங்குன்றத்தில் கலகலக்கும் அதிமுக!

By Asianet TamilFirst Published May 6, 2019, 8:38 AM IST
Highlights

திருப்பரங்குன்றம் பெரும்பாலும் அதிமுகவுக்கே சாதகமாக இருக்கும் தொகுதி. இந்தத் தொகுதி எப்படியும் தங்களுக்குக் கிடைக்கும் என்று அதிமுக எதிர்பார்க்கிறது. அதேபோல அமமுகவும் ஓட்டைப் பிரித்து வெற்றியைப் பறிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுவருகிறது. 

அதிமுக சார்பில் போட்டியிட திருப்பரங்குன்றம் தொகுதி கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.வை வளைக்க தினகரன் தரப்பு முயற்சி செய்துவருவதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.
மதுரையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் 2011-ல் திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக மாவட்ட செயலாளராகவும் இருந்திருக்கிறார். 2009-ல் திருமங்கலம் இடைத்தேர்தல் நடந்தபோது அதிமுக வேட்பாளராக இருந்தவரும் இவர்தான். அப்போது முத்துராமலிங்கத்துக்காக திருமங்கலம் தொகுதியில் 5 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார் ஜெயலலிதா. 2016-ல் திருமங்கலம் தொகுதி அமைச்சர் உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டதால், முத்துராமலிங்கம் போட்டியிட முடியாமல் போனது.


ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார் முத்துராமலிங்கம். தற்போது நடந்து முடிந்த  நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் மகனுக்கு ஆதரவாக தேனியில் தீவிர பிரசாரத்தில் இருந்தார். இவர் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். முத்துராமலிங்கத்துக்கு சீட்டு கிடைக்கும் என்று உள்ளூர் அதிமுகவினரும் எதிர்பார்த்தார்கள். இவருக்கு தொகுதியை வாங்கி  தர ஓபிஎஸும் முயற்சி செய்தார். ஆனால், உள்ளூர் அமைச்சர் செல்லூர் ராஜூவின் எதிர்ப்பால் சீட்டு கிடைக்கவில்லை.


இதனால் அதிருப்தியில் இருக்கும் முத்துராமலிங்கம் தேர்தல் பணி எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செயல்வீரர்கள் கூட்டம், தேர்தல் பிரசாரம் என எதிலும் அவர் தலைகாட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. அவரை சமாதானப்படுத்த ஓபிஎஸ் எடுத்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. நேரடியாக அதிமுக நிர்வாகியை அனுப்பி பார்த்தும், அவரைப் பார்க்க முடியவில்லை என்கிறார்கள் அதிமுகவினர்.
இதேபோல மறைந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ போஸ் குடும்பத்தினரும் இங்கே போட்டியிட விரும்பினார்கள். அவர்கள் குடும்பத்தினருக்கும் சீட்டு கிடைக்காததால் அந்தக் குடும்பத்தினரும் தேர்தல் பிரசாரத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.


திருப்பரங்குன்றம் பெரும்பாலும் அதிமுகவுக்கே சாதகமாக இருக்கும் தொகுதி. இந்தத் தொகுதி எப்படியும் தங்களுக்குக் கிடைக்கும் என்று அதிமுக எதிர்பார்க்கிறது. அதேபோல அமமுகவும் ஓட்டைப் பிரித்து வெற்றியைப் பறிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் அதிருப்தியில் ஒதுங்கியிருக்கும் முத்துராமலிங்கத்தை தங்கள் பக்கம் இழுக்க தினகரன் தரப்பு முயற்சி செய்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரசாரமே தொடங்கிவிட்ட நிலையில், அதிமுகவில் உள்கட்சி பிரச்னை தீராமல் இருப்பதால் அதிமுக தலைமை கலக்கத்தில் உள்ளது. 

click me!