
ஆளுநர் வாகனம் மீது தாக்குதல்?
நீட் தேர்விற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மீது 200 நாட்கள் கடந்த நிலையிலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கூறி தமிழக ஆளுநர் அளித்த விருந்த தமிழக அரசு மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்தது. இதே போல சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் விழாவில் கலந்துகொள்ளாமல் ஆளுநரின் விழாவை புறக்கணித்தனர். இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்ற தமிழக ஆளுநருக்கு பல்வேறு கட்சிகள் சார்பாக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது ஆளுநர் வாகனம் மீது கல் எறியப்பட்டதாகவும், கம்புகள் வீசப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதற்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்திருந்தது. தமிழக ஆளுநர் வாகனம் மீது எந்த தாக்குதல் சம்பவமும் நடைபெறவில்லையென திட்டவட்டமாக கூறியிருந்தது.
அதிமுக குற்றச்சாட்டு
இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, போராட்டக்காரர்கள் ஆளுநர் வாகனம் மீது மீதும், காவல்துறையினர் மீதும் கற்களையும், கம்புகளை வீசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் வண்மையாக கண்டிக்கதக்கது என கூறினார். மேலும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தது தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வில்லையென குற்றம்சாட்டினார். மேலும் ஆளுநருக்கே பாதுக்காப்பு இல்லையென்றால் தமிழக மக்களின் நிலை கேள்வி குறியாக உள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தின் போது அவரது கார் மீது கற்கள் கோடி வீசப்பட்டதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவித்தார். மேலும் ஆளுநரின் சுற்றுப் பயணத்தில் அவரது பாதுகாப்பு வாகனத்தின் மீது எந்தவித கற்களோ, கொடியோ வீசப்பட்டு பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் ஏற்படவில்லை என கூடுதல் டிஜிபி அறிக்கை அளித்திருப்பதாகவும் மேலும் ஆளுநரின் பாதுகாப்புத் துறை அதிகாரியும் டிஜிபிக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னா ரெட்டி மீது தாக்குதல் ?
ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறிய முதலமைச்சர், சாத்தான்குளம் காவல் நிலைய மரணம் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் குறித்து தெரியாது என பேசிய எடப்பாடி பழனிசாமி, தற்போது சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவது வேடிக்கையாக இருப்பதாக தெரிவித்தார். கடந்த 1995 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழக ஆளுநராக இருந்த சென்னாரெட்டி கார் திண்டிவனம் அருகே அதிமுகவினரால் மறிக்கப்பட்டு அவரது கார் மீது கற்கள், முட்டை, தக்காளி போன்றவை வீசப்பட்ட தாகவும், இதில் அதிமுக எல்எல்ஏக்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றதாகவும் கூறினார். அப்போது வெளியான நாளிதழ்களில் உயிர் தப்பினார் ஆளுநர் சென்னா ரெட்டி என்ற தலைப்போடு செய்தி இடம்பெற்றதையும் குறிப்பிட்டார். மேலும் சென்னை விமான நிலையத்திற்கு வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சேஷன் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தையும் அதன் பின்னர் அவரது நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த போது அதனையும் முற்றுகையிட்டு அதிமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தையும் குறிப்பிட்டார்.
ஆளுநர் மீது தூசு கூட படவில்லை
மேலும் சுப்பிரமணிய சுவாமி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவினர் நடத்திய தாக்குதல், பெண் ஐஏஎஸ் அதிகாரியான சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்கள் அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றது எனவும் நேற்றைய ஆளுநர் சுற்றுப்பயணத்தின்போது அவரது மீது ஒரு தூசு கூட விழவில்லை எனவே ஆளுநர் மீது நடக்காத ஒரு தாக்குதலை நடந்ததாக கூறி அரசியல் செய்யக்கூடாது என எதிர்க் கட்சித் தலைவருக்கு மரியாதை யுடன் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் ஆளுநரை பயன்படுத்தி தமிழகத்தில் அரசியல் செய்யலாம் என்று நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.