ஒரே நேரத்தில் இந்த பக்கம் திருமாவளவன்.. அந்த பக்கம் அன்புமணி.. கெத்துகாட்டும் சீமான்.. கலங்கம் திமுக.

By Ezhilarasan BabuFirst Published Dec 24, 2021, 3:43 PM IST
Highlights

சகிப்புத்தன்மையும், கருத்துரிமையையும் மதிப்பதும் தான் ஜனநாயக அரசியலின் அடிப்படை. அத்துமீறியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். விமர்சனங்களுக்கு வன்முறைகளால் பதிலடி தர தொடங்கினால், தமிழகம் அரசியல் களமாக இருக்காது. வன்முறைக் களமாக மாறிவிடும்.

தர்மபுரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மேடையில் ஏறி திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  விமர்சனங்களுக்கு வன்முறைகளால் பதிலடி தர தொடங்கினால், தமிழகம் அரசியல் களமாக இருக்காது. வன்முறைக் களமாக மாறி விடும் என்றும், அரசியலில் சகிப்புத்தன்மை அவசியம் என்றும் பாமக அவர் எச்சரித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான சீமான் இலங்கையில் தமிழீழம் எங்கள் தாகம் என்ற முழக்கத்தை முன்வைத்து நாம் தமிழர் கட்சிக்கு தலைமையேற்றது முதல்  சதா திமுகவையும் அதன் தலைவர்களையும் குறிவைத்த விமர்சித்து வருகிறார். ஒரு கட்டத்தில் " திராவிடத்தால் வீழ்ந்தோம் "  என பேச தொடங்கிய சீமான் மற்றொரு திராவிட கட்சியான அதிமுகவை தவிர்த்து திமுகவை மட்டும் குறிவைத்து விமர்சித்து வருகிறார். இதனால் திமுக-நதக ஆகிய இரண்டு கட்சியினருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடும் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் இந்த மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது.  குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் முதல்வரையும், அவரின் குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் அவதூறாக பேசி  வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியையும், தற்போதைய முதல்வர் ஸ்டாலினையும் சீமான், அவரது தம்பிகள் அவதூறாக பேசிவருகின்றனர். அந்த வரிசையில்  நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதே நிலையில் தமிழகத்தை காஷ்மீர் உடன் ஒப்பிட்டு பேசிய யூடியூபர் மாரிதாஸ் என்பவரையில் தேச துரோக வழக்கில் போலீசார் கைது செய்தனர். ஆனால் நீதிமன்றம் மாரிதாசுக்கு பிணை வழங்கியுள்ளது. எனவே மாரிதாஸ்  சாட்டை துரைமுருகன் கைதை ஒப்பிட்டு பேசிய சீமான், திமுக பாஜக ஆதரவாளரான மாரிதாசுக்கு எதிராக சரியாக வழக்கை நடத்தவில்லை, சரியாக வாதாடவில்லை, அவர்களுக்கு திமுக வழக்கறிஞர்கள் சலுகை காட்டியுள்ளனர் என்று திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்ததுடன்,  என் வளர்ச்சியை விரும்பாதவர்கள் என்னை சங்கி, பாஜக பி டீம் என்று கூறி என் மீது அவதூறு பரப்பி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு இதுதான் பதில் என மேடையிலேயே தனது காலில் இருந்த செருப்பை கழற்றி காண்பித்தார்.

அவரின் இந்த செயல் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. பலரும் அவரின் இந்த செயலை கண்டித்து வருகின்றனர். ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்ற நாகரிகம்கூட இல்லாமல், மேடையில் இப்படியா நடந்து கொள்வது என்றும் சீமானை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில்தான் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் முதல்வரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த திமுகவினர் அவரின் பேச்சைக் கேட்டு கொந்தளிப்படைந்ததுடன்  நாம் தமிழர் கட்சியின் மேடையில் ஏறி ஹிம்லரை கண்டிக்க முயன்றனர். உங்களுக்கு மரியாதையாக பேச தெரியாதா? மரியாதையாக பேசு என்று எச்சரித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கீழே இருந்த சில திமுக நிர்வாகிகள் நாற்காலிகளை தூக்கி மேடையில் வீசினர். அங்கிருந்த மைக் செட் தூக்கி எறியப்பட்டது. ஹிம்லரை தாக்க முயற்சித்தனர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். அங்கு வந்த போலீசார் திமுகவை சமாதானப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. திமுகவினரின் இந்த நடவடிக்கையை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் நாம் தமிழர் தம்பிகள் மேடையில் நாகரீகமாக பேசக் கற்றுக் கொள்ள வேண்டும், அநாகரீகமான பேசினால் இப்படித்தான் எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும். இது ஆரம்பம்தான் என சிலர் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன். நாம் தமிழர் கட்சியின் மேடையில் ஏறி அவர்களைத் தாக்கிய செயல் கண்டனத்துக்கு உரியது. இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒருபோதும் இதை நியாயப்படுத்த முடியாது. திமுகவினரின் இந்த நடவடிக்கையை திமுக தலைமை ஒருபோதும் விரும்பாது.

எனவே அந்தசெயலில் ஈடுபட்டவர்கள் மீது திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அவர் இந்த கருத்து நாம் தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரத்தில் திருமாவளவனை திமுகவினர் சிலர் சமூகவலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில், திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. சகிப்புத்தன்மையும், கருத்துரிமையையும் மதிப்பதும் தான் ஜனநாயக அரசியலின் அடிப்படை. அத்துமீறியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். விமர்சனங்களுக்கு வன்முறைகளால் பதிலடி தர தொடங்கினால், தமிழகம் அரசியல் களமாக இருக்காது. வன்முறைக் களமாக மாறிவிடும்..

அந்த நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. அதை கருத்தில் கொண்டு இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் அனைவரும் தடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த கருத்து நாம் தமிழர் கட்சியினர் வரவேற்றுள்ளனர். அதேநேரத்தில் அன்புமணியின் கருத்தை திமுகவினர் சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகின்றனர்.  

click me!