காங்கிரஸ் தயவில் ராஜ்யசபா எம்.பி. ஆனாரா கனிமொழி? மாணிக்கம் தாக்கூர் வெளியிட்ட தகவலின் பின்னணி..!

By Selva KathirFirst Published Jan 18, 2020, 10:36 AM IST
Highlights

விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுக – காங்கிரஸ் கூட்டணி என்பது நட்பு அடிப்படையிலானது என அவர் தெரிவித்துள்ளார். பரஸ்பரம் இரண்டு கட்சிகளுமே கூட்டணி மூலமாக பலன் அடைந்துள்ளதாக மாணிக்கம் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் காங்கிரஸ் மட்டும் அ ல்ல கூட்டணியில் உள்ள எந்த கட்சியையும் ஏளனம் செய்யும் வகையில் துரைமுருகன் பேசியிருக்க கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரசுக்கு வாக்கு வங்கி இல்லை கூட்டணியை விட்டு போனால் போகட்டும் என்று துரைமுருகன் கூறிய நிலையில் காங்கிரஸ் தயவில் தான் கனிமொழி எம்பி ஆனார் என்பதை மறந்துவிட வேண்டாம் என அவருக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுக – காங்கிரஸ் கூட்டணி என்பது நட்பு அடிப்படையிலானது என அவர் தெரிவித்துள்ளார். பரஸ்பரம் இரண்டு கட்சிகளுமே கூட்டணி மூலமாக பலன் அடைந்துள்ளதாக மாணிக்கம் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் காங்கிரஸ் மட்டும் அல்ல கூட்டணியில் உள்ள எந்த கட்சியையும் ஏளனம் செய்யும் வகையில் துரைமுருகன் பேசியிருக்க கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இத்தோடு நிறுத்திக் கொள்ளாத மாணிக்கம் தாக்கூர், திமுகவின் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி முன்னர் ராஜ்யசபா எம்பி ஆனது காங்கிரஸ் தயவில் தான் என்பதை திமுக மறக்க கூடாது என்றும் அவர் கூறியிருந்தார். உண்மையில் கனிமொழி காங்கிரஸ் தயவில் மாநிலங்களவை எம்பி ஆனாரா? அதிலும் கூட கூட்டணியில் இல்லாத நிலையிலும்  கனிமொழிக்கு எம்பி பதவி கொடுத்தது காங்கிரஸ் என்று கூறியிருந்தார் மாணிக்கம் தாக்கூர் இது உண்மையா?

கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக – காங்கிரஸ் கூட்டணி உருவானது. மிக வலுவான தேர்தல் வெற்றியை தொடர்ந்து 2006 சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி தொடர்ந்தது. ஆனால் திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் திமுகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தாலும் காங்கிரஸ் ஆதரவுடன் திமுக தமிழகத்தை ஐந்து வருடம் ஆட்சி செய்தது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.

ஆனால் 2011 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி படு தோல்வி அடைந்தது. திமுகவிற்கு எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. திமுகவால் வெறும் 23 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் 5 இடங்களில் வென்று இருந்தது. இந்த நிலையில் 2012ம் ஆண்டு கூட்டணியை திமுக முறித்துக் கொண்டு மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் 2013ம் ஆண்டு மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே மாநிலங்களவை எம்பியாக இருந்த கனிமொழி மீண்டும் எம்பி ஆக வேண்டும் என்றால் 33 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால் திமுகவிடம் 23 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். புதிய தமிழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏக்கள் நான்கு பேர் திமுகவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர். ஆனாலும் கூட எம்பியாக திமுகவிற்கு போதுமான எம்எல்ஏக்கள் இல்லை. இதற்கிடையெ 29 எம்எல்ஏக்கள் வைத்திருந்த தேமுதிகவும் வேட்பாளரை அறிவித்தது.

இதனால் கனிமொழி எம்பி ஆவாரா என்கிற கேள்வி எழுந்தது. அப்போது தான் யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கனிமொழிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று சோனியா அறிவித்தார். இத்தனைக்கும் அப்போது திமுக – காங்கிரஸ் கூட்டணி இல்லை. காங்கிரஸ் ஆதரவுடன் தேமுதிக வேட்பாளரை வீழ்த்தி கனிமொழி எம்பி ஆனார். இதனைத் தான் காங்கிரஸ் தயவில் மாநிலங்களவை எம்பி ஆனவர் கனிமொழி என்று மாணிக்கம் தாக்கூர் கூறியுள்ளார்.

click me!