
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் 2 அரசு மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தனிப்பட்ட முறையில் தகவல் அறிந்தவர்களும் நேரடி தொடர்புடையவர்களும் அவர்களுக்குத் தெரிந்த தகவல்களை பிரமாணப்பத்திரங்களாக வரும் 22-ம் தேதிக்குள் விசாரணை ஆணையத்திற்கு அனுப்புமாறு விசாரணை ஆணையம் கேட்டுக்கொண்டது.
அதன்படி, பல்வேறு பிரமாணப் பத்திரங்களும் 70-க்கும் மேற்பட்ட கடிதங்களும் விசாரணை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டன. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையத்திற்கு உதவுவதற்காக மருத்துவ குழு அமைக்கும் பணியும் நடந்துவருகிறது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க எழிலகத்தில் விசாரணை கூண்டும் அமைக்கப்பட்டது. நேற்று விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், திமுகவை சேர்ந்த சரவணனிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் அரசு மருத்துவர்கள் இருவருக்கு நேரில் ஆஜராகும்படி சம்மனும் அனுப்பப்பட்டது. அதன்படி, சென்னை எழும்பூர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நாராயணபாபு மற்றும் மருத்துவர் மயில்வாகனம் ஆகிய இரு மருத்துவர்களும் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர்.
அரசு மருத்துவர்கள் இருவரிடமும் விசாரணை ஆணையரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஆறுமுகசாமி விசாரித்து வருகிறார்.