வாய்க்கு வந்தபடி அடிச்சுவிட்டு ஆட்சிக்கு வந்துட்டு இழுத்தடிக்க வழி தேடுறீங்களோ.. திமுகவை வசைபாடும் தினகரன்.!

By Asianet TamilFirst Published Aug 13, 2021, 9:36 PM IST
Highlights

வாய்க்கு வந்தபடி, அடித்துவிட்டவர்கள், தற்போது அதனை செயல்படுத்தாமல் இழுத்தடிப்பதற்கான வழிகளைத் தேடுவதைப் போன்று தெரிகிறது என்று தமிழக அரசின் பட்ஜெட் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
 

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, தமது நிதிநிலை அறிக்கையில் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றிய அறிவிப்புகளை வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது. பெட்ரோல் - டீசல் மீதான வரியைக் குறைத்து, லிட்டருக்கு 5 ரூபாய் விலையைக் குறைப்போம் என்று சொன்னவர்கள் இப்போது பட்ஜெட்டில் பெட்ரோலுக்கு மட்டும் 3 ரூபாய் குறைத்திருக்கிறார்கள். இது ஆறுதலளித்தாலும், விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமான டீசல் விலையைக் குறைக்கும் வகையில் அதன் மீதான வரியையும் தமிழக அரசு குறைக்கவேண்டியது அவசியம்.
வரி வருவாயில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளப்போவதாக நிதியமைச்சர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் சீர்திருத்தத்தை எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பதற்கான செயல்திட்டம் தமிழக பட்ஜெட்டில் இல்லை. அதனால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் எவ்வித பாதிப்புக்கும் ஆளாகாமல் பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. தேர்தல் நேரத்தில் அனைத்து இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி, கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக்கடன் ரத்து என்று வாய்க்கு வந்தபடி, அடித்துவிட்டவர்கள், தற்போது அதனை செயல்படுத்தாமல் இழுத்தடிப்பதற்கான வழிகளைத் தேடுவதைப் போன்று தெரிகிறது.
இது தி.மு.க தனது வழக்கப்படி தமிழக மக்களை பட்டவர்த்தனமாக ஏமாற்ற நினைக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதைப்போன்றே கல்விக் கடன் ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் போன்றவற்றுகான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தைச் செயல்படுத்தப்போவதாக தி.மு.க அரசு அறிவித்திருப்பதைப் பார்க்கும்போது, அவர்கள் இதற்கு முன் ரொம்பவும் சிறப்பாக செயல்படுத்திய சிங்காரச் சென்னை மற்றும் கூவம் சீரமைப்புத் திட்டங்கள் நம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 2.0 திட்டமும் அப்படி ஆகிவிடக்கூடாது.
மேலும், அரசு ஊழியர் ஓய்வூதிய வயது குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் போன்ற எதிர்பார்க்கப்பட்ட முக்கிய அறிவிப்புகளும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. மொத்தத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு மட்டுமான திமுக அரசின் காகிதமில்லா பட்ஜெட் வெறும் காகிதப்பூ மாலையா? அல்லது மக்களுக்கு பயன்தரும் வாசமலரா? என்பதை பட்ஜெட்டில் அறிவித்தவற்றை அவர்கள் செயல்படுத்தும் விதத்தைப் பார்த்தே முடிவு செய்ய முடியும்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

click me!