"சின்னம்மாவ மறந்துட்டியே துரோகி" - மாஜி அமைச்சரை ஒருமையில் திட்டிய தொண்டர்..

By Ezhilarasan BabuFirst Published Mar 10, 2022, 12:46 PM IST
Highlights

ஐயா.. கட்சி நல்லா இருக்கணும், எல்லோரும் ஒண்ணா இருக்கணும், சின்னம்மாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் போடுகிறார்கள் அதற்கு நீங்கள் ஆதரவு கொடுக்கனும், ஆனால் தென்மாவட்டத்தில் நீங்கள் தான் சின்னம்மாவை எதிர்த்து கொண்டிருக்கிறீர்கள்.

அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கு தென்மாவட்டங்களில் கடம்பூர் ராஜு தடையாக இருப்பதாக கூறி, அவரை தொலைபேசியில் அழைத்து தொண்டர் ஒருவர் " சின்னம்மாவை மறந்துட்டியே டா துரோகி" என பேசியுள்ளதாக ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த தொலைபேசி உரையாடலில் முன்னாள் அமைச்சரை அந்த தொண்டர் தகாத வார்த்தைகளில்  பேசுவதாக உள்ளது.சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கியுள்ள நிலையில் இந்த தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது.

இரட்டை தலைமையின் கீழ் தோல்வி: 

ஓபிஎஸ்- இபிஎஸ் என்ற இரட்டை தலைமையின்கீழ் அதிமுக இயங்கி வருகிறது. இந்த தலைமையில் கீழ் சந்தித்த நான்கு தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக மண்ணைக் கவ்வியுள்ளது என்றே சொல்லலாம். இந்த நிலைமைக்கு கட்சித் தலைமைகள் தான் இதற்கு காரணம், கட்சியை வழிநடத்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வத்திற்கு திறமை இல்லை, அதனால் தான் இந்த வீழ்ச்சி, அழிவில் உள்ள கட்சியை மீட்க வேண்டும் என்றால் சசிகலா கட்சிக்கு தலைமையேற்க வேண்டும் என சசிகலா ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வத்தின் பண்ணை இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் கட்சியில் இணைக்க வேண்டுமென கோரி தீர்மானம் நிறைவேற்றினர். அது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சசிகலாவை கட்சியில் சேருங்க..

இதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளார். இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.பி ராஜா சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் ஓ.பி ராஜாவை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதில் வேறு வழி இல்லாமல் ஓ.பன்னீர்செல்வமும் கையொப்பம் இட்டுள்ளார். இது அதிமுக தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என ஆதரவு குரல் எழுந்திருப்பது சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் பலர் அதிமுகவில் இரட்டை தலைமையை கட்சி தொண்டர்களும் ஏற்றுக் கொண்டுவிட்டனர். அதிமுகவை பொறுத்தவரை நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான். சசிகலாவையோ அல்லது டிடிவி தினகரனையோ கட்சியில் சேர்க்கின்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறி வருகின்றனர்.

கடம்பூர் ராஜைவை வசைபாடிய தொண்டர்..??? 

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சசிகலாவுக்கு எதிராக காட்டமாக பேசி வருகிறார். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி விட்டால் சசிகலாவை கட்சியில் சேர்த்து விட முடியுமா? கட்சியின் பொதுக்குழுதான் முடிவெடுக்க முடியும். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது நடக்காத காரியம் என கருத்து தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து சசிகலா ஆதரவாளர்களை கொந்தளிப்படைய செய்துள்ளது. இந்நிலையில்தான் அதிமுக தொண்டர் ஒருவர் கடம்பூர் ராஜுவை தொலைபேசியில் அழைத்து அவரை  வசை பாடியுள்ளார் என சமூக வலைதளத்தில் ஆடியோ வெளியாகி உள்ளது.  அந்த ஆடியோவில் விவரம் பின்வருமாறு:-

 

தொலை பேசி உரையாடல்: 

ஐயா வணக்கம்  நான்  கோவில்பட்டி  சரவணா புரத்திலிருந்துசெல்லப்பாண்டியன் பேசுகிறேன்.. கடம்பூர் ராஜு அய்யா தானே.?

மாஜி அமைச்சர்: ஆமாம்  சொல்லுங்க.

செல்ல பாண்டியன்: அய்யனார் அதிமுக எக்ஸ் மாணவரணி  ஒன்றிய செயலாளர் பேசுகிறேன், 


மாஜி அமைச்சர்: உங்களை நான் இதுவரை பார்த்ததே இல்லையே..?

செல்ல பாண்டியன்: நீங்கள் சொல்வது என் அம்மா ஊர், நான் இப்போது வத்திராயிருப்பு கோட்டையூரில் இருக்கிறேன்..

மாஜி அமைச்சர்: அப்படி சொல்லுங்க.

செல்ல பாண்டியன்: மாரிசாமி தேவரின் மதனி பையன் பேசுகிறேன்..

மாஜி அமைச்சர்: சொல்லுங்க...

செல்ல பாண்டியன்: ஐயா.. கட்சி நல்லா இருக்கணும், எல்லோரும் ஒண்ணா இருக்கணும், சின்னம்மாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் போடுகிறார்கள் அதற்கு நீங்கள் ஆதரவு கொடுக்கனும், ஆனால் தென்மாவட்டத்தில் நீங்கள் தான் சின்னம்மாவை எதிர்த்து கொண்டிருக்கிறீர்கள். கட்சி நல்லா இருக்கணும், தனிப்பட்ட ஒருவர் மட்டும் நல்லா இருக்கணும் நினைக்காதீங்க, நம் கட்சி நல்லா இருக்கணுமா இல்லையா.?

மாஜி அமைச்சர்: பெரிய ஆள் நீங்க,  நீங்க பெரிய ஆள்.

செல்ல பாண்டியன்: ஐயா நான் பெரிய ஆள்னு சொல்ல வரல..

மாஜி அமைச்சர்: டேய்.. டேய்.. போன வை டா நீ.. என்ன ம...ருக்கு டா எனக்கு போன் பண்ற...? 

செல்ல பாண்டியன்: டேய் நீ என்னடா இழந்த கட்சிக்காக..?  நீ எம்எல்ஏவாக எப்படிடா வந்த..? சின்னம்மா காலில் விழுந்துதானடா வந்த..? கடைசியில் சின்னம்மா வேண்டாம் என்கிறாயாடா ஆடா நீ எல்லாம் துரோகி இல்லையாடா..?

மாஜி அமைச்சர்:  வை போன வை..  இவ்வாறு அந்த உரையாடல் முடிகிறது.  இது கடம்பூர் ராஜூவுடன் நடந்த உரையாடல் தானா என்பது உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!