தபால் வாக்களிக்க வற்புறுத்தப்படுகின்றனர் மாற்றுத்திறனாளிகள்? அதிகாரிகள் அட்ராசிட்டி, தலையிடுமா தேர்தல் ஆணையம்.

By Ezhilarasan BabuFirst Published Mar 8, 2021, 12:43 PM IST
Highlights

அதேவேளையில் மாநிலம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்களிக்கும் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளின் சுதந்திரமான நடவடிக்கைகளை இது தடுக்கும் நோக்கமாகும்.  

தபால் வாக்களிக்க மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாகவும், தேர்தல் ஆணையம் அதை தடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சங்க பிரதிநிதிகள் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் முதியோருக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. படுத்த படுக்கையில் நடமாட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு இந்த வசதி பயன்படும் என்ற அடிப்படையில் எமது சங்கம் வரவேற்கிறது. ஆனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று, தபால் வாக்களிக்க ஒப்புதல் அளிக்கும்  படிவத்தை அளித்து அதில் கையொப்பமிட சொல்லி கட்டாயப்படுத்துவதாக எமது சங்கத்திற்கு மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். 

திருவண்ணாமலை மாவட்டம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில், தபால் வாக்கு மாற்றுத்திறனாளிகள் அளிக்கவில்லை என்றாலும், அதற்கு கடிதம் தரச்சொல்லி வற்புறுத்துவதாக கூறப்படும் புகார்கள் எல்லாம் அதிர்ச்சி அளிக்கிறது. அதிகாரிகள் வீடுகளுக்கு கொண்டுவரும் தபால் வாக்கு படிவத்தில் தெரிந்தோ தெரியாமலோ ஒப்புதலளித்துவிட்டால், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் முதியோர் வாக்காளர் வாக்குச்சாவடிக்கு செல்லும் உரிமையை இழந்து விடுவர். அனைத்து வாக்குச்  சாவடிகளும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் முதியோர் வாக்களிக்க ஏதுவாக தடையற்ற சூழலுடன் உருவாக்க வேண்டிய தனது கடமையை தட்டிக்  கழிப்பதோடு  மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என குற்றம் சாட்டுகிறோம். 

வாக்குச்சாவடிக்கு நேரில் வரவே முடியாத மிகக்கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அவர்கள் விரும்பும் பட்சத்தில் இந்த வாய்ப்பை அளிப்பதை ஆட்சேபிக்க முடியாது. அதேவேளையில் மாநிலம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்களிக்கும் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளின் சுதந்திரமான நடவடிக்கைகளை இது தடுக்கும் நோக்கமாகும். ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் இதுபோன்ற சட்ட விரோத செயல்களை எமது சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இப்படிப்பட்ட வற்புறுத்தல் உள்ளிட்ட ஜனநாயக விரோத செயல்களை அதிகாரிகள் நிறுத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்குமாறு  வலியுறுத்துகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

click me!