கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட தலைவர்களே பீதி கிளப்புவதா..? எல்.முருகன் ஆவேசம்..!

By Asianet TamilFirst Published Apr 19, 2021, 9:40 PM IST
Highlights

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட தலைவர்கள் மக்கள் மத்தியில் தவறான நோக்கத்தில் திசை திருப்பும் முயற்சியில் தடுப்பூசி குறித்துப் பீதி ஏற்படுத்துகிறார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அடுத்த நாளே மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனால் தடுப்பூசி குறித்து மக்கள் இடையே பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் விவேக் வீட்டுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று சென்றார். அங்கே விவேக் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து எல்.முருகன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “'நடிகர் விவேக் மாரடைப்பால்தான் மரணம் அடைந்துள்ளார்.  கொரோனா தடுப்பூசியால் அவர் இறக்கவில்லை. இதைத் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் கூறிய பிறகும் சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். அவர்களையெல்லாம் தண்டிக்க வேண்டும். தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவது தேவையில்லாதது. குறிப்பாக தலைவர்கள் சமுதாயத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டும். அவர்களே இரண்டு தவணை கரோனா தடுப்பூசியைப் போட்டுள்ளனர். அப்படிப்பட்ட தலைவர்களே மக்கள் மத்தியில், தவறான நோக்கத்தில், திசை திருப்பும் முயற்சியில் தடுப்பூசி குறித்துப் பீதி ஏற்படுத்துகிறார்கள்.
தற்போது பொதுமக்களே நேரடியாகச் சென்று தன்னார்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்கிறார்கள். அவர்களைத் திசைத் திருப்பும் வகையில் மக்கள் மத்தியில் தடுப்பூசி பற்றி புரளியைக் கிளப்புவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று எல்.முருகன் தெரிவித்தார்.
 

click me!