அரக்கோணம் தலித் இளைஞர்கள் கொலை..! நடந்தது என்ன? – உண்மை கண்டறியும் குழு பரபர அறிக்கை..!

By Selva KathirFirst Published Apr 14, 2021, 11:14 AM IST
Highlights

அரக்கோணத்தில் விசிக வேட்பாளருக்கு ஆதரவாக பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இரண்டு இளைஞர்கள் பாமகவினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில் அது முழுக்க முழுக்க பொய் என்று சமூக சமத்துவப்படை கட்சியும் தலைவரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சிவகாமி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

அரக்கோணத்தில் விசிக வேட்பாளருக்கு ஆதரவாக பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இரண்டு இளைஞர்கள் பாமகவினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில் அது முழுக்க முழுக்க பொய் என்று சமூக சமத்துவப்படை கட்சியும் தலைவரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சிவகாமி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

கடந்த 7ந் தேதி அரக்கோணம் அருகே உள்ள சோகனூரில் வைத்து இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் ஐந்து பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விசிக வேட்பாளர் கவுதம சன்னாவிற்கு ஆதரவாக பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தமைக்காக இரண்டு தலித் இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்டதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டினார். மேலும் இந்த கொலைகளை அரங்கேற்றியது பாமக ஜாதி வெறியர்கள் என்றும் அவர் கூறியதால் பதற்றம் வெடித்தது.

இந்த நிலையில் கொலை தொடர்பாக இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசிக ஒரு விளக்கமும், பாமக ஒரு விளக்கமும் அளித்து வருகிறது. ஆனால் உண்மையை யார் கூறுகிறார்கள் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் சமூக சமத்துவ படை கட்சியின் தலைவருமான சிவகாமி கொலை நடைபெற்ற சோகனூருக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியது. அத்துடன் கொலை நடைபெற்ற இடத்தில் ஆய்வும் மேற்கொண்டது. இதனை அடுத்து அந்த குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது

திருமாவளவன் குறிப்பிடுவதைப் போல பாமக விற்கும் கொலை செய்த இளைஞர்களுக்கும் சம்பந்தம் இல்லை என கூறி உள்ளார்.  மேலும் கொலை செய்யப்பட்ட அந்த இரண்டு இளைஞர்களும் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் என்பதும் தவறான தகவல். கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் எந்தவிதமான அரசியல் கட்சியிலும் இல்லாதவர்கள். அந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரில் ஒருவர் கூட பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் இல்லை.

 கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் அதிமுகவின் ஒன்றிய செயலாளர் மகன் எனவும் தெரிவித்துள்ளனர்.  இது தேர்தல் பின்புலத்தில் நடைபெற்ற கொலை அல்ல. சாதிய மோதல் பல ஆண்டுகளாக அந்த இரு கிராமங்களிலும் நடைபெற்று வருவதாகவும் அதன் தொடர்ச்சியாகவே இந்த மோதல் போக்கு நடைபெற்று கொலையில் முடிந்து இருப்பதாகவும் அவர்களின் உண்மை கண்டறியும் குழு கள ஆய்வு செய்து தெரிவித்துள்ளது. அதாவது கொலையான அர்ச்சுனன், சூர்யா ஆகிய இருவரும் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள் என்பது தான் உண்மை கண்டறியும் குழு கூறியுள்ள முக்கிய தகவல்.

அத்தோடு கொலையான இருவரும் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தவர்கள் என்கிற தகவலிலும் உண்மை இல்லை என்பதை உண்மை கண்டறியும் குழு ஆணித்தனமாக கூறியுள்ளது. இதன் மூலம் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தமைக்காக தலித் இளைஞர்கள் இருவர் பாமகவினரால் கொலை என்கிற திருமாவளவனின் குற்றச்சாட்டு பொய் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் முன்விரோதத்தில் நடைபெற்ற கொலையை அரசியல் காரணத்திற்காக விசிக பயன்படுத்தியிருப்பதும் சிவகாமி தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. உண்மை கண்டறியும் குழு அமைத்து இந்த தகவல்களை கூறியுள்ள சிவகாமி ஐஏஎஸ் அவர்களும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!