விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. ஏப்ரல் 1-ம் தேதி முதல் மும்முனை மின்சாரம்.. முதல்வர் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Feb 26, 2021, 11:20 AM IST
Highlights

தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறும் போது அந்த நீர் 100 வறண்ட ஏரிகளுக்கு எடுத்து சென்று நிரப்பும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார். பின்னர் இந்தத் திட்டத்திற்கு ரூ.565 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் போது அணையின் இடது கரையில் இருந்து உபரி நீர் கால்வாய்கள் மூலம் திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும்.

பின்னர் அங்கிருந்து 940 குதிரை திறன் கொண்ட 10 மின் மோட்டார்கள் மூலம் நீரேற்றம் செய்து குழாய்கள் வழியாக வினாடிக்கு 126 கன அடி வீதம் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எம். காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதன் பிறகு அங்கிருந்து 23 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். இந்த திட்டத்திற்காக வெள்ளாளபுரம் ஏரியில் துணை நீரேற்று நிலையம் மற்றும் கண்ணந்தேரியில் துணை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தை இன்று காலை மேட்டூர் அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியில் முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

பின்னர், பேசிய அவர், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், 5 ஆண்டு காலத்தில் 2 முறை விவசாயிகளின் பயிக்கடனை ரத்து செய்த அரசு அதிமுக அரசு எனவும் குறுகிய காலத்தில் விவசாயிகளுக்காக மேட்டூர் - சரபங்கா உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

click me!