நெருங்கும் போலீஸ்... பதுங்கும் ராஜேந்திர பாலாஜி... துப்புக் கொடுக்கிறதா காவல்துறை..?

By Thiraviaraj RMFirst Published Dec 28, 2021, 1:07 PM IST
Highlights

தேர்ந்த சட்டப் புள்ளிகளை கைக்குள் வைத்துக்கொண்டு சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறார் முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி.

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி மற்றும் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து கடந்த 17ம் தேதி அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னை, திருச்சி, கொடைக்கானல், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் தேடப்பட்டு வருகிறது. வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீசும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் தொடர்புடையதாக பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லுக் அவுட் நோட்டீஸெல்லாம் போட்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வில்லன் கணக்காய் தேடிக்கொண்டிருக்கிறது விருதுநகர் போலீஸ். ஆனால், தனிப்படைகளின் எண்ணிக்கைதான் அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர, ஆள் சிக்கியபாடில்லை. தேர்ந்த சட்டப் புள்ளிகளை கைக்குள் வைத்துக்கொண்டு சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கும் ராஜேந்திர பாலாஜி.

சாமி படத்து வில்லன் கணக்காய் கார்கள் மாறி மாறி வடமாநிலத்துக்கே போய்விட்டார், அங்கே ஹெலிகாப்டரில் சுற்றுகிறார் என்றெல்லாம் செய்திகளை சுற்றவிடுகிறார்கள். இருந்தாலும் உள்ளூர் போலீஸார் சிலரின் ஒத்துழைப்பு இருப்பதாலேயே ராஜேந்திர பாலாஜி எஸ்கேப் ஆகிக்கொண்டே இருக்கிறார் என சந்தேகிக்கும் காவல் துறை தலைமை, ராஜேந்திர பாலாஜி விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை தென்மண்டல ஐஜி வசம் ஒப்படைத்திருக்கிறதாம். ​
போலீஸின் ஒவ்வொரு அசைவும் ராஜேந்திர பாலாஜிக்கு அப்டேட் ஆக, பத்து நாட்களுக்கு முந்தைய அவருடைய அழைப்புகளை ஆராய்ந்ததில் கோகுல இந்திராவின் உறவுக்கார இன்ஸ்பெக்டர் ஒருவரின் நம்பரும் இருந்துள்ளது.

இதையும் படியுங்கள்:-  திருப்பத்தூரில் ராஜேந்திர பாலாஜி பதுங்கல்? உதவிய அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கைது.!

காவல்துறையிடமும் இப்போது விசாரணை தீவிரமாகியுள்ளது. கேரளா, பெங்களூர் பக்கம் தீவிர தேடுதல் நடந்தாலும், மதுரையில் முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜுவின் விராட்டிபத்து தோப்பு, மானாமதுரை உறவினர் வீடு, விருதுநகரின் ஒதுக்குப் புறம் என மேலும் சில இடங்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். தலைமறைவாகி ஒளிந்துள்ள ராஜேந்திரபாலாஜியிடம் ஒரு துப்பாக்கி இருக்கும் விவரம் போலீசுக்கு கிடைத்துள்ளது. ​இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அதிமுக நிர்வாகிகளை திருநெல்வேலி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அத்துடன் ராஜேந்திர பாலாஜி கிருஷ்ணகிரி, வேலூர் பகுதியில் பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகம் கொண்டு அந்த பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீக்கிரமே, ராஜேந்திர பாலாஜி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். ஆனால், எப்படியும் ஓரிரு நாட்களில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்து விடுவோம் என்கிறது காவல் துறை வட்டாரம். காத்திருந்து பார்ப்போம் ராஜேந்திர பாலாஜி சிக்குவாரா என்பதை...

click me!