நெருங்கும் செயற்குழு.. முதலமைச்சர் வேட்பாளர்.. முரண்டு பிடிக்கும் ஓபிஎஸ்..!

By Selva KathirFirst Published Sep 26, 2020, 11:04 AM IST
Highlights

செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தனக்கு ஆதரவு அதிகம் என்பதை உணர்ந்தால் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் இறங்கி வருவார் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறார்.
 

திங்களன்று செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் தொடர்ந்து முரண்டு பிடிப்பதால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக செயற்குழு அறிவிப்பு வெளியானது முதலே அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் தான் முதலமைச்சர் தீவிரம் காட்டி வருகிறார். விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த ஆய்வுப் பணிகளை முதலமைச்சர் ஒத்திவைத்தார். இதற்கு காரணம் பிரதமர் மோடியுடன் நடைபெற இருந்த வீடியோ கான்பிரன்ஸ் ஆலோசனை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் முதலமைச்சருடனான ஆலோசனையில் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அவருக்கு அங்கு பேசவும் அதிகம் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலும் வீடியோ கான்பிரன்ஸ் மீட்டிங்கை தலைமைச் செயலகத்தில் இருந்து தான் அட்டென்ட் செய்ய முடியும் என்று இல்லை. முதலமைச்சர் எங்கு இருக்கிறாரோ அங்கிருந்தே பங்கேற்க முடியும். அப்படி இருந்தும் மாவட்ட ஆய்வுப் பணிகளை முதலமைச்சர் ஒதுக்கி வைத்ததற்கு காரணம் அரசியல் பணிகள் என்கிறார்கள். செயற்குழுவில் தனக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பதை ஓபிஎஸ்க்கு நிரூபிக்க வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக உள்ளதாக சொல்கிறார்கள். செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தனக்கு ஆதரவு அதிகம் என்பதை உணர்ந்தால் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் இறங்கி வருவார் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறார்.

இதனால் தான் கடந்த ஒரு வாரமாக அரசுப் பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு செயற்குழுவில் தனக்கான ஆதரவை திரட்டும்
பணியில் எடப்பாடியார் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே நேற்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ், இபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வருகை தந்தனர். அவர்கள் செயற்குழு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்ததாக தகவல் வெளியானது. ஆனால் தொலைக்காட்சி முன்னாள் தொகுப்பாளரும், அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக இருந்தவருமான ரபி பெர்னார்டும் நேற்று கட்சி அலுவலகம் வந்திருந்தார்.

வழக்கமாக அதிமுக சார்பிலான அறிக்கைகள், செயற்குழு, பொதுக்குழு தீர்மானங்களில் பிழைகள் எதுவும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்பவர் ரபி பெர்னார்ட். அந்த வகையில் நேற்று அவர் கட்சி அலுவலகம் வந்து ஓபிஎஸ், இபிஎஸ்சுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது செயற்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். இந்த தீர்மானங்கள் பெரும்பாலும் அதிமுக அரசை பாராட்டியும், திமுகவை விமர்சித்தும் உருவாக்கப்பட்ட தீர்மானங்கள் என்கிறார்கள். முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக எந்த தீர்மானமும் விவாதத்திற்கு கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை என்கிறார்கள்.

இதற்கு காரணம் தனக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுத்தால் எடப்பாடிக்கு முதலமைச்சர் வேட்பாளர் பதவி என்று ஓபிஎஸ் கண்டிப்பாக இருப்பது தான் என்கிறார்கள். நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ்சிடம் மாற்றம் வருமா என்கிற திக் திக் மனநிலையில் எடப்பாடி உள்ள நிலையில், அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தனது அன்றாட பணிகளில் ஓபிஎஸ் கவனம் செலுத்தி வருகிறாராம். அதற்கு காரணம் வழக்கம் போல் டெல்லியில் இருந்து அவருக்கு கிடைத்துள்ள ஆதரவுக் கரம் தான் என்கிறார்கள்.

click me!