நெருங்கும் தேர்தல்! கலைஞர் பெயரில் கட்சி.. அழகிரியை சந்தித்த பாஜக புள்ளி.. கொடைக்கானல் ரகசியம்..!

By Selva KathirFirst Published Oct 8, 2020, 11:46 AM IST
Highlights

முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் மூத்த மகனுமான மு.க.அழகிரியை புதிய அரசியல் கட்சி துவங்குமாறு பாஜக புள்ளி ஒருவர் கொடைக்கானலில் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் மூத்த மகனுமான மு.க.அழகிரியை புதிய அரசியல் கட்சி துவங்குமாறு பாஜக புள்ளி ஒருவர் கொடைக்கானலில் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் நேரத்தில் மட்டும் பாஜக மட்டும் ஆளும் கட்சியாக உள்ளவர்களுக்கு நினைவிற்கு வருபவர்களில் முக்கியமானவர் மு.க.அழகிரி. நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மு.க.அழகிரியை வீடு தேடிச் சென்று சந்தித்தார் பாஜக தேசியச் செயலாளராக இருந்த ஹெச்.ராஜா. ஆனால் அதன் பிறகு மு.க.அழகிரியை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவ்வப்போது மு.க.ஸ்டாலினை விமர்சித்து சமூக வலைதளங்களில் ஒரு சில கருத்துகளை மட்டும் மு.க.அழகிரி வெளியிட்டு வந்தார். ஆனால் அரசியல் ரீதியாக மு.க.அழகிரியால் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. 

இதனால் கிட்டத்தட்ட அரசியல் அநாதை போலவே மு.க.அழகிரி வலம் வருகிறார். ஆனால் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சியில் அழகிரிக்கு நல்ல பொறுப்பு வழங்கப்படும் என்று பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால் ரஜினியும் தற்போதைக்கு கட்சி ஆரம்பிக்கும் சூழல் இல்லை. இதனால் நாடாளுமன்ற தேர்தலை போலவே சட்டப்பேரவை தேர்தலிலும் ஒதுங்கி ஓரமாக இருக்கவே அழகிரி விரும்புவார் என்கிறார்கள். ஆனால் அழகிரி ஒதுங்கினாலும் அவரை இந்த முறை தேர்தல் களத்திற்கு இழுத்து வர வேண்டும் என்கிற முடிவில் பாஜக இருப்பதாக சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு கடுமையான குடைச்சல் கொடுக்க வேண்டும் என்பது தான் பாஜக மேலிடத்தின் திட்டம். அதற்கு முன்னோட்டமாகவே டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கின் விசாரணை வேகமெடுத்துள்ளது கூறுகிறார்கள்.

2ஜி வழக்கு மூலமாக குடைச்சல் கொடுக்கும் அதே நேரத்தில் தமிழகத்தில் மு.க.அழகிரியையும் களம் இறக்கினால் ஸ்டாலின் நிலை குழைந்து போவார் என்பது தான் பாஜகவின் திட்டம். இதனால் அழகிரியை தூண்டிவிட்டு கருணாநிதி திமுக அதாவது கதிமுக என்கிற பெயரில் கட்சியை ஆரம்பிக்க வைக்க பாஜக முயற்சிப்பதாக சொல்கிறார்கள். ஏற்கனவே கலைஞர் பெயரில் கட்சி ஆரம்பிக்க அழகிரி ஆயத்தமானார். ஆனால் அவர் கலைஞர் சமாதியை நோக்கி நடத்திய ஊர்வலம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.இதனால் அப்போது தனிக்கட்சி என்கிற முடிவை ஒத்திவைத்தார் மு.க.அழகிரி. 

ஆனால்  தேர்தல் சமயத்தில் சீட் கிடைக்காத அதிருப்தியில் பலர் திமுகவில் இருந்து விலகுவார்கள். அவர்களை எல்லாம் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்க அழகிரியை வைத்து கதிமுகவை ஆரம்பிக்க பாஜக காய் நகர்த்துவதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்கச் சென்ற மு.க.அழகிரியை பாஜக புள்ளி ஒருவர் ரகசியமாக சந்தித்து சென்றுள்ளார். இந்த சந்திப்பின் போது கதிமுக என்ற பெயரில் கட்சி ஆரம்பிப்பது குறித்து அழகிரியிடம் அந்த பெரும்புள்ளி பேசியதாக சொல்கிறார்கள். மேலும் கட்சி ஆரம்பிப்பதற்கான செலவுகள், செயல்திட்டம், நிர்வாகிகள் உள்ளிட்டவை வரை இருவரும் ஆலோசித்ததாக பேசுகிறார்கள். அதற்கு சிட்டிங் எம்எல்ஏக்கள் சிலரை திமுகவில் இருந்து உங்கள் கட்சியில் சேர்த்துவிடுவது எங்கள் பொறுப்பு என்று பாஜக தரப்பில் இருந்து உறுதி அளித்ததாக சொல்கிறார்கள். 

அதோடு மட்டும் அல்லாமல் மு.க.அழகிரி போட்டியிட அதிமுக கூட்டணியில் தொகுதியை பெற்றுத்தருவது வரை பேச்சுகள் சென்றதாக கூறுகிறார்கள். பாஜக புள்ளி கூறிய தகவல்கள் அனைத்துமே அழகிரிக்கு இனிப்பு ரகமாம். ஆனால் இது குறித்து யோசிப்பதாக மட்டுமே அழகிரி பதில் அளித்ததாக சொல்கிறார்கள். புதிய கட்சி தொடர்பாக அழகிரி உறுதியாக எந்த பதிலும் அளிக்காத நிலையில் அடுத்தடுத்த சந்திப்புகள் மூலம் அழகிரியை சரி செய்து திமுகவிற்கு போட்டியாக கதிமுகவை ஆரம்பித்துவிடலாம் என்று கணக்கு போட்டு வருகிறது.

click me!