பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். இதனை அடுத்து ஒரு மாத காலத்திற்குள் விழுப்புரம் சிறையில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். நீதிமன்ற உத்தரவையடுத்து தமிழக சட்டபேரவை சார்பாக பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு திருக்கோவிலூருக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு உருவானது.
இந்த சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பொன்முடி சிறையில் சரணடைவதற்கு தடை விதித்தார். மேலும் தண்டனைக்கு தடை விதிக்க மறுத்து நீதிபதி, லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். இதனை ஏற்று கடந்த வாரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் உச்சநீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு மீதான அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த நிலையில் பொன்முடிக்கு விதிக்கப்பட்டிருந்த மூன்று ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக மீண்டும் எம்எல்ஏவாக பொன்முடி ஏற்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்ட பேரவை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறுகையில்,பொன்முடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அவருக்கான தண்டனைக்கு தடை விதித்து உள்ளதால் வயநாடு எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட ஒரு சில எம்பிக்களுக்கு எந்த மாதிரி தீர்வு காணப்பட்டதோ அதே போல பொன்முடி வழக்கிலும் சட்டமன்றம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். பொன்முடிக்கு வழக்கு சம்பந்தமாக சட்டப்பேரவை அலுவலர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதவி வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என கூறினார்.