20 தொகுதிகளுக்கு ஜனவரியில் இடைத்தேர்தல்! தீயா வேலை பார்க்கும் தேர்தல் ஆணையம்!

By sathish kFirst Published Nov 10, 2018, 5:06 PM IST
Highlights

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.

கலைஞர் மறைவை தொடர்ந்து காலியான திருவாரூர், அ.தி.மு.க எம்.எல்.ஏ போஸ் காலமானதை தொடர்ந்து காலியாக உள்ள திருப்பரங்குன்றம் மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததால் காலியாக உள்ள 18 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. தற்போது நடைபெறும் 5 மாநில தேர்தல்களுடன் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்திற்கு இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வானிலையை காரணம் தமிழக தலைமைச் செயலாளர் கேட்டுக் கொண்டதால் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு ஜனவரியில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு இல்லை என்று தினகரன் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

சசிகலாவும் கூட 20 தொகுதிகளுக்கும் தேர்தலை எதிர்கொள்ள அனுமதி கொடுத்துவிட்டார். இதனால் தினகரன் தரப்பு தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்யாது என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவுக்கு டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகள் அவசர அழைப்பு விடுத்துள்ளனர். இதனை ஏற்று அவர் அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தன்னுடன் காலியாக உள்ள 20 தொகுதிகளின் முழுவிவரத்தையும் சத்யபிரதா எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. அவருடன் ஆலோசனையை முடித்துவிட்டு டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு ஜனவரியில் தேர்தலை நடத்தி முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!