சென்னையில் கழிவறையை சுத்தம் செய்த அண்ணாமலை.. நாடகம் போடுவதாக வசைபாடிய ஜோதிமணி.!

By Asianet TamilFirst Published Oct 7, 2021, 10:06 PM IST
Highlights

சென்னையில் கழிவறையைச் சுத்தம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கரூர் எம்.பி. ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளார்.
 

மோடி பிரதமரான பிறகு ‘தூய்மை இந்தியா’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.  இத்திட்டத்தின்படி பாஜகவினர் பொது இடங்களைத் தூய்மைச் செய்வது உள்ளிட்ட பணிகளைச் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 199 வார்டில் பொது கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டார்.  தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து இந்தப் பணியை அண்ணாமலை செய்திருந்தார்.
இதுதொடர்பான புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் அண்ணாமலை பகிர்ந்திருந்தார். ஃபேஸ்புக் பதிவில், “'நம்ம கடற்கரை நம்ம சென்னை' என்ற இந்தத் தன்னார்வ இயக்கம் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பொது கழிப்பறைகளை சுத்தம் செய்”வதாகவும் அண்ணாமலை பதிவிட்டிருந்தார். அண்ணாமலையின் இந்த பதிவையும் புகைப்படங்களையும் வைத்து கரூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி விமர்சனம் செய்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “விவசாயிகளை படுகொலை செய்யும் கட்சி பாஜக. மோடி அரசின் அமைச்சர் மகன் கார் ஏற்றி விவசாயிகளை கொலை செய்த காட்சியை நாடே பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறது. இந்த விவசாயிகள் படுகொலையை மறைக்கவே தமிழக பாஜக கோவில் முற்றுகை, கழிவறை கழுவுதல் என்று நாடகமாடுகிறது.” என்று ஜோதிமணி அதில் தெரிவித்துள்ளார்.

click me!