"கவர் வாங்கிய அண்ணாமலை".. சைலேந்திரபாபுவைப் பற்றி பேசலாமா.? EVKS இளங்கோவன் சர்ச்சை பேச்சு.

By Ezhilarasan BabuFirst Published Dec 20, 2021, 7:00 PM IST
Highlights

அதிமுகவைப் பொறுத்தவரையில் ஒரு விவரம் இல்லாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என திமுகவை வலியுறுத்திவருகிறார்கள் இது கேலிகூத்தாக உள்ளது. 

காவல் நிலையத்தில் டேபிளுக்கு கீழே கவர் வாங்கியவரை தமிழக பாஜக மாநில தலைவராக ஆக்கிவிட்டார்கள் என அண்ணாமலையை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அண்ணாமலை அவன், இவன் என்று ஒருமையில் பேசி இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஈவிகேஎஸ் இளங்கோவன் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சி அமைத்துள்ளது. அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியாக பாஜக மிகத் தீவிரமாக திமுக அரசை விமர்சித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற முதல் பாஜக திமுக எதிர்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது வரை எந்த தலைவருக்கும் இல்லாத அளவிற்கு அண்ணாமலையை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பாஜக ஆதரவாளர்கள் பிரபல யூடியூபருமான மாரிதாஸ் என்பவர் வெலிங்டன் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தை வைத்து காஷ்மீரி போல தமிழ்நாடு மாறி வருகிறதா என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர். அவரது கைதை கண்டித்து அண்ணாமலை தமிழக போலீசாரை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது தமிழக காவல்துறை என்பது டிஜிபி சைலேந்திரபாபுவின் கட்டுப்பாட்டில் இல்லை, திமுக மாவட்ட செயலாளர்கள் தமிழக போலீசை கட்டுப்படுத்துகின்றனர். திமுக ஐடி விங் கட்டுப்பாட்டில் தமிழக போலீஸ் உள்ளதே தவிர டிஜிபி சைலேந்திரபாபு வின் கட்டுப்பாட்டில் இல்லை, சைக்கிள் ஓட்டுவது, செல்பி எடுப்பதுதான் டிஜிபியின் பணியாக இருந்து வருகிறது என சைலேந்திரபாபுவை கடுமையாக விமர்சித்திருந்தார். அதேபோல் பாஜக மூத்த தலைவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழக அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்களை அண்ணமாலை வைத்ததாகவும் தகவல் வெளியானது இந்நிலையில் தமிழக டிஜிபி யை அண்ணாமலை விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, டிஜிபி சைலேந்திரபாபுவை விமர்சிப்பதற்கு அண்ணாமலைக்கு தகுதி வேண்டும் என கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சு பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் அவரையும் அவரது நடவடிக்கைகளையும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது.

அந்த வரிசையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அண்ணாமலையை அவன் இவன் என்று ஒருமையில் பேசி விமர்சித்திருந்தார். இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மதுரை மாவட்ட பாஜக பொறுப்பாளர் டாக்டர் சரவணன் ஈவிகேஎஸ் இளங்கோவன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர் மதுரையில் கால்வைக்க முடியாது, ஈவிகேஎஸ் இளங்கோவனை தாக்கினால் 1 லட்சம்  பரிசு என அறிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்ணாமலையை மிக சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக  அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு:-  பாஜக தலைவராக தமிழிசை இருந்தபோதே எங்களுக்கு மாறுபட்ட கருத்தைக் கூறினாலும் அதை தெளிவாக முறையாக சொல்லக் கூடிய ஆற்றல் படைத்தவர் அவர். ஆனால் அண்ணாமலையை பொருத்தவரையில் ஏதோ ஒரு போலீஸ் ஸ்டேஷனில் டேபிளுக்கு கீழே கவர் வாங்கி கொண்டிருந்தவரைபோல பேசுகிறார். மொத்தத்தில் அவர் முதிர்ச்சி இல்லாதவர், மிகச் சிறியவர்.

நான் சிறுவன் என்று சொல்லவில்லை சிறியவர் என்று சொல்லுகிறேன். அவரைப் பொறுத்தவரையில் அவர் தலையில் தாங்க முடியாத அளவிற்கு பாரத்தை ஏற்றி வைத்திருக்கிறார்கள். மொத்தத்தில் அண்ணாமலையால் பிஜேபிக்கு ஒன்றும் பிரயோஜனம் கிடையாது. மோடியை பொறுத்தவரையில் அவர் பூஜாரியாகவோ, சாமியாராகவோ இருந்திருக்க வேண்டியவர். இந்த நாட்டினுடைய பிரதமராக இருக்க தகுதியற்றவர். இந்திய எல்லையில் இருக்கிற கிராமங்களில் சீனாக்காரர்கள் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதையெல்லாம் தடுப்பதற்கு துணிவு இல்லாதவர்களாக மோடி தலைமையிலான ஆட்சி இருக்குறது. ஆனால் தங்களை விட்டால் நாட்டை ஆள வேறு யாருமில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். விரைவில் மோடியின் அரசு தூக்கி எறியப்பட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்.

அதிமுகவைப் பொறுத்தவரையில் ஒரு விவரம் இல்லாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என திமுகவை வலியுறுத்திவருகிறார்கள் இது கேலிகூத்தாக உள்ளது. மத்தியஅரசு குறைப்பதற்கு முன்பாகவே ஸ்டாலின் அரசு பெட்ரோல் மீதான வரியை குறைத்தது. மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டியதே மாநில அரசிடம் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டிலேயே முதல் முதலாக தமிழகத்தில் தான் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டது. ஆனால் இந்த விவரம் கூட தெரியாமல் பாஜகவுடன் சேர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டம்  நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல அண்ணாமலை தமிழக காவல்துறை டிஜிபியை விமர்சித்து பேசி வருகிறார், அண்ணாமலை காவல்துறையில் இருக்கும்போதே சரியான நடந்து கொண்டவர் அல்ல. அவர் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது. அவரைப் பொறுத்தவரையில் தன்னைப்போல தான் மற்றவர்களும் இருப்பார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழகத்திலே இருக்கிற காவல் துறையைச் சார்ந்தவர்கள் அவ்வளவு கேவலமானவர்கள் அல்ல. இவ்வாறு அண்ணாமலையை ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்தார். 
 

click me!