நரிக்குறவர் அஸ்வினி மேட்டரில் ஆடிப்போன பாஜக… ஸ்டாலினுக்கு அண்ணாமலை பாராட்டு!!

By Narendran SFirst Published Nov 6, 2021, 2:08 PM IST
Highlights

அனைத்து மத்திய அரசு திட்டங்களையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்வார் என்று நம்புவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,கடந்த தீபாவளியன்று செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார். மேலும், கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவு ஒப்புதல், அங்கன்வாடி மற்றும் பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணைகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணை ஆகியவற்றையும் வழங்கினார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதை தொடர்ந்து பழங்குடி குடியிருப்பில் உள்ள அஸ்வினி இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். முன்னதாக மாமல்லபுரத்தில் உள்ள பெருமாள் கோயிலில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிடுவதற்காக கடந்த மாதம் 24 ஆம் தேதி பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியை சேர்ந்த அஸ்வினி மற்றும் அதே சமூதாயத்தை சேர்ந்த மக்கள் சிலர் சென்றனர். ஆனால்,அவர்களை பந்தியில் உட்கார விடாமல் கோயில் நிர்வாகத்தினர் விரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மனமுடைந்த நரிக்குறவ பெண் அஸ்வினி தனக்கு நேர்ந்த கொடுமைகளை காட்சியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும் இந்த காட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் சென்றது. இதனைத் தொடர்ந்து,ச்கடந்த மாதம் 29 ஆம் தேதி மாமல்லபுரம் ஸ்ரீ தலசயன பெருமாள் ஆய்வுக்காக வந்த இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அந்த பெண் மற்றும் அந்த சமூகத்தினரை அழைத்து அன்னதானம் வழங்கி, அவர்களுடன் அமர்ந்து அவரும் அன்னதானம் சாப்பிட்டார். இந்த நிலையில் அஸ்வினி வீட்டிற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்ப  நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து,தனது வீட்டிற்கு முதல்வர் வந்ததால் நெகிழ்ச்சியடைந்த அஸ்வினி, தங்களது வீட்டிற்கு வந்தது மிகவும் சந்தோசம் எனக் கூறினார்.  மேலும்,இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி என்றும் சகோதரி அஸ்வினி மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், அஸ்வினி இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகள் என்றும் தமிழகத்தின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சகோதரி அஸ்வினி இல்லத்திற்கு முதலமைச்சர் சென்று வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது என்பது பாஜகவின் நிலைப்பாடு. மத்திய அரசினுடைய முத்ரா கடன் திட்டத்தையும், சுவா நிதி திட்டத்தையும் அஸ்வினிக்கு அறிமுகப்படுத்தியதற்காக முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள்! பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய அனைத்து திட்டங்களும் சகோதரி அஸ்வினி போன்றவர்களுக்கு தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழக முதல்வர் அனைத்து மத்திய அரசு திட்டங்களையும் மக்களுக்கு இதேபோல் நேரடியாக எடுத்துச் செல்வார் என்று நம்புகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!