"எந்த பிரச்சினையை கையில் எடுத்தாலும் விளங்குவதே இல்லை".. அண்ணாமலையை பங்கம் செய்த கே.எஸ்.அழகிரி.!

By vinoth kumar  |  First Published Mar 26, 2022, 6:07 AM IST

 மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தை வஞ்சிக்கிற அதேநேரத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அரசியல் ஆதாயம் தேடுகிற நோக்கத்தில் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு வருகிறார். 


தமிழகத்தில் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எதிராக பா.ஜ.க. நடத்துகிற ஆதாரமற்ற அவதூறு கருத்துகளைப் பரப்புகிற முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

முதல்வர் சாதனை

Latest Videos

undefined

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுக்கால மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு, தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பதவியேற்ற அன்றே கோப்புகளில் கையெழுத்திட்டுக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டினார். சட்டப்பேரவை தேர்தலின் போது கொடுத்த 505 வாக்குறுதிகளில் கடந்த 10 மாத காலத்தில் 208 வாக்குறுதிகளை நிறைவேற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். அவரது சாதனைகளைத் தமிழகமே பாராட்டி மகிழ்கிறது. 

பாராட்டு கே.எஸ்.அழகிரி

நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் கல்லூரிகளை மேம்படுத்த பெருந்தலைவர் காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடி  திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் கல்லூரி கட்டிடங்கள் அதிகளவில் கட்டப்பட்டு தமிழகம் முழுவதும் கல்லூரிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 அன்று தமிழக அரசின் சார்பாக கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டு அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞரைப் போலவே தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் பெருந்தலைவர் காமராஜரின் புகழைப் போற்றுகிற வகையில் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதைத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் பாராட்டி மகிழ்கிறேன்.

சட்டமன்ற கூட்டம் முடிந்தவுடன் அன்று மாலையே 4 நாள் துபாய் பயணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டிருக்கிறார். அவரது முதல் வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு முதலீட்டாளர்களுக்கு நேரடியாக  அழைப்பு விடுக்க முற்பட்டிருக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு வாரம் கொண்டாடும் அரங்கை திறந்து வைக்க இருக்கிறார். இந்த கண்காட்சியில் இந்தியா உட்பட 192 நாடுகள் பங்கேற்கின்றன. இதன்மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அன்னிய நாடுகளின் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் தீவிர முயற்சி மேற்கொண்டிருப்பதை வரவேற்கிறேன். 

மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட பாஜக

ஆனால், அதேநேரத்தில் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு மீது மத்திய பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து வருகிறது. குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரிடம் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய 19 சட்ட மசோதாக்கள் கவனிப்பாரற்று நிலுவையில் உள்ளன. அரசமைப்புச் சட்டத்தில் பொதுப் பட்டியலில் உள்ள துறைகளைக் கபளீகரம் செய்கிற போக்கை மத்திய பா.ஜ.க. அரசு கையாண்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கை, நீட் திணிப்பு போன்றவற்றின் மூலம் கூட்டாட்சித் தத்துவத்தை பா.ஜ.க. அரசு குழிதோண்டிப் புதைத்து வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தை வஞ்சிக்கிற அதேநேரத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அரசியல் ஆதாயம் தேடுகிற நோக்கத்தில் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு வருகிறார். 

அவதூறுகளை பரப்பும் அண்ணாமலை

விருதுநகர் இளம் பெண் கூட்டுப் பலாத்கார வழக்கில் தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என்று கூறி விருதுநகரிலும், சென்னையிலும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தியிருக்கிறார். எந்த பிரச்சினையைக் கையில் எடுத்தாலும் எடுபடாத நிலையில் அவதூறுகளைப் பரப்புகிற நோக்கத்தில் விருதுநகர் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறார். அதிலும் அவர் தோல்வியைத் தான் தழுவுவார். விருதுநகரில் 22 வயது பெண் சம்மந்தப்பட்ட பலாத்கார வழக்கில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார். மேலும் தவறு செய்வோருக்கு பாடமாக இருக்கும் வகையில் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சட்டப்பேரவையில் உறுதி கூறியிருக்கிறார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். விசாரணையை தமிழக டி.ஜி.பி. நேரடியாகக் கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

 தமிழக பா.ஜ.க. எடுத்த நடவடிக்கை என்ன? 

 இந்த வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. துணை கண்காணிப்பாளர்கள் வினோதினி மற்றும் முத்தரசி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 60 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டுமென்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இதன்மூலம் விசாரணை நியாயமாகவும், துரிதமாகவும் நடைபெறும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  எனவே, தமிழக பா.ஜ.க.வை பொறுத்தவரை விருதுநகர் பாலியல் பலாத்காரம் குறித்து போராட்டம் நடத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை. பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடக்கிற பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விசாகா குழு அமைக்கப்படும் என்று தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி ஜூன் 25, 2022 அன்று கருத்து கூறியதாக செய்தி வெளிவந்தது. அதுகுறித்து தமிழக பா.ஜ.க. எடுத்த நடவடிக்கை என்ன ? 

அண்ணாமலையை விளாசும் அழகிரி

அதேபோல, ஏ.பி.வி.பி. தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா தாம் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டார் என்பதை எவரும் மறுக்க முடியாது. சமீபத்தில் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்ட ஏ.பி.வி.பி. மாணவர்களை சிறைக்குச் சென்று சந்தித்ததற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஒரு அரசு மருத்துவராக இருந்து கொண்டு பா.ஜ.க.வின் மாணவர் பிரிவின் தலைவராக இருந்து செயல்படுவதை எந்த சட்டத்தின் அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் அவரை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்தது மிகச் சரியான நடவடிக்கையாகும். ஊருக்கு உபதேசம் செய்யும் அண்ணாமலை, இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு  தமிழக பா.ஜ.க. ஆளாகாமல் இருக்கும் வகையில் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்.

எனவே, தமிழகத்தில் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எதிராக பா.ஜ.க. நடத்துகிற ஆதாரமற்ற அவதூறு கருத்துகளைப் பரப்புகிற முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது. தொடர்ந்து நடைபெற்று வருகிற அனைத்துத் தேர்தல்களிலும் பிரதமர் மோடியையும், தமிழக பா.ஜ.க.வையும் மக்கள் நிராகரித்து வருவதைப் போல எதிர்காலத்திலும் நிராகரிக்கவே செய்வார்கள். எனவே, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அரசியல், தமிழகத்தில் எந்த வகையிலும் எடுபடாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

click me!