செய்தியாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் அண்ணாமலைக்கு அந்த நோயாக இருக்குமோ? வெளுத்து வாங்கும் மநீம..!

By vinoth kumar  |  First Published Jan 5, 2023, 7:44 AM IST

 புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் முருகேசன் அவர்களை மிரட்டும் தொணியில் ஆவேசமாகவும், அச்சுறுத்தும் வகையிலும், அநாகரீகமாகவும் நடந்து கொண்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 


தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அநாகரீகமாக நடந்து கொள்வதையே தொடர் வாடிக்கையாக அண்ணாமலை கொண்டிருப்பது ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு ஏற்புடையதல்ல என பொன்னுசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் நல அணியின் மாநில செயலாளர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழக தலைவர் அண்ணாமலையிடம் ரபேல் வாட்ச் பில், காயத்ரி ரகுராம் கூறிய குற்றச்சாட்டுகள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பிய போது அதற்கு நேரடியாக பதில் கூற முடியாமல், நிதானமிழந்து செய்தியாளர்களிடம் அவர்களின் ஊடகங்களின் பெயரைக் கேட்டு மிரட்டும் தொணியில் பேசியதை ஊடகங்களின் நேரலையில் கண்ட போது அதிர்ச்சியாக இருந்தது.

Tap to resize

Latest Videos

குறிப்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் முருகேசன் அவர்களை மிரட்டும் தொணியில் ஆவேசமாகவும், அச்சுறுத்தும் வகையிலும், அநாகரீகமாகவும் நடந்து கொண்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்வதையே தொடர் வாடிக்கையாக அண்ணாமலை அவர்கள் கொண்டிருப்பது ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு ஏற்புடையதல்ல. மேலும் அனைத்து துறைகளிலும் மத்திய அரசு டிஜிட்டல் மயத்தை வலியுறுத்தி வரும் நிலையில் ஊடகத்துறையில் வளர்ந்து வரும் டிஜிட்டல் பிரிவான யூடியூப் சேனல் நடத்துவோரை இழிவுபடுத்தும் வகையில் பேசியது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்று ஏற்பாடு செய்து பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்களை தங்களின் இடத்திற்கு வரவழைத்து விட்டு, நேர்காணல் நடைபெறும் சமயத்தில் செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள திராணியற்று, கத்தி, கூப்பாடு போட்டு, நீ எந்த சேனல்..?, என்னை கேள்வி கேட்க நீ யார்..? யூடியூப் சேனலுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என பேசுவதும், ஒவ்வொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் ஊடகங்கள் தன்னைப் பற்றி பேச வேண்டும் என்கிற எதிர்மறையான நோக்கத்தில் பரபரப்பு செய்திகளுக்காக எதையாவது சொல்ல வேண்டும் என்கிற ரீதியில் பேசுவதை வழக்கமாக கொண்டு அண்ணாமலை அவர்கள் செயல்படுவதை காண்கையில் இது ஒருவிதமான மனநோயாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது.

மேலும் தமிழக அரசின் DIPR குறிப்பிட்ட பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களுக்கு மட்டும் லட்சங்களிலும், கோடிகளிலும் விளம்பர வருவாய் வருவதாக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் அண்ணாமலை அவர்கள் அதற்கான ஆதாரங்களோடு, தரவுகளோடு ஊடகங்கள் முன் தோன்றி பேசியிருந்தால் அது ஏற்புடையதாக இருந்திருக்கும். ஆனால் ஒரு வழிப்போக்கன் போகிற போக்கில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டு போவது போல ஆதாரங்கள் எதுவும் கையில் இல்லாமல் பேசுவதும், அது குறித்து கேள்வி எழுப்பும் செய்தியாளர்களிடம் நீங்கள் ஆர்டிஐ போட்டு கேளுங்க, வாங்குகிற சம்பளத்திற்கு வேலை செய்யுங்க என ஊதியம் கொடுக்கும் முதலாளி போல செய்தியாளர்கள் மீது எரிந்து விழுந்து, பிராண்டுவதும் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைமைக்கு அழகல்ல.

எனவே இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டமைக்காக அண்ணாமலை அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்பதோடு, இனி வருங்காலங்களில் இது போன்ற செயல்பாடுகளை தவிர்த்து, தனது தவறுகளை திருத்திக் கொள்ளவும், தகுந்த தரவுகளோடும், ஆதாரங்களோடும் குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டும் என்பதே தமிழக மக்கள் அனைவரின் எண்ணமாகும் என பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

click me!