தீபாவளி பட்டாசு தொடர்பாக இரு மதத்தவர்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீடு செய்துள்ளார்.
மத வெறுப்பு பேச்சு- அண்ணாமலை மீது வழக்கு
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவ மிஷனரி தான் முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி கொடுத்திருந்தார்.ஆனால் உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பியதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனையடுத்து இது இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்து உள்ளதாக கூறி சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக, சேலம் நீதிமன்றம் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம்
இந்த சம்மனை ரத்து செய்யக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஓரு வருடத்திற்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பட்ட போது அதனால் பொது அமைதிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அண்ணாமலை தரப்பு தெரிவித்திருந்தது. இந்த வழக்கு தொடர்பான மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை சேலம் நீதிமன்றம் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்றும் உத்தரவிட்டார்தெரிவித்திருந்தார்.
உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட அண்ணாமலை
இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவில் இருந்து விலக்கு பெறும் வகையில் உச்சநீதிமன்றத்தில் அண்ணாமலை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,சென்னை உயர்நீதிமன்றம் தனது வழக்கு தொடர்பான மனுவை முழுமையாக ஆராயாமல் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே சேலம் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை விரைவில் உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்