அன்புமணி ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி..? பாமகவில் நடப்பது என்ன..?

By Asianet TamilFirst Published Oct 19, 2020, 9:07 PM IST
Highlights

அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வராக வர எல்லா தகுதிகளும் உள்ளன. அந்த இலக்கை நோக்கித்தான் பாமகவைக் கட்டமைத்து வருகிறோம் என்று பாமக அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் தீரன் தெரிவித்துள்ளார்.
 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருகிறது. தேர்தலை எதிர்கொள்ள ஒவ்வொரு கட்சியும் வியூகங்களை அமைத்துவருகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பிடித்திருந்த கட்சிகள் அப்படியே உள்ளன. ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின் நிலைப்பாடு தெரியவில்லை. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அன்புமணி ராமதாஸுக்கு துணை முதல்வர் பதவியை பாமக கேட்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.


இந்நிலையில் இதுபற்றி பாமக அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் தீரன் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், “அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கிறார். அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வராக வர எல்லா தகுதிகளும் உள்ளன. அந்த இலக்கை நோக்கித்தான் பாமகவைக் கட்டமைத்து வருகிறோம். வருங்காலத்தில் அதற்கான காலம் கண்டிப்பாக வரும்.


கூட்டணிக் கட்சிகளிடம் அன்புமணி ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி கேட்பது குறித்தெல்லாம் பாமக செயற்குழுவில்தான் முடிவு செய்யப்படும். பாமகவினர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் வகையிலேயே இருக்க வேண்டும். டாக்டர் ராமதாஸ் ஒரு கூட்டணியில் இருக்கும்போது 90 சதவீத வன்னியர்கள் ராமதாஸின் பேச்சைத்தான் கேட்பார்கள். எனவே, கூட்டணிக் கட்சிகள் எங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்” என்று தீரன் தெரிவித்துள்ளார்.

click me!