
பாஜக சிறிய கட்சி என அன்புமணி ராமதாஸ் பேசுவதெல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது என பாஜக பொதுச் செயலாளர் கரூர் நாகராஜன் தெரிவித்துள்ளார். பாஜக சிறிய கட்சி என்ற பிம்பமெல்லாம் உள்ளாட்சி மன்ற தேர்தலின்போதே உடைந்துவிட்டது. பாஜகவுக்கு அடுத்ததுதான் பாமக, நாம் தமிழர் கட்டி எல்லாமே என கரு. நாகராஜன் கூறினார். இது பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் கூட்டணியில் இருந்து வந்தாலும் கூட தங்கள் கட்சிக்கென தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் தொடர்ந்து பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக தமிழகத்தில் கால் பதிக்க வேண்டும் என்ற முனைப்பில் அக்காட்சி ஈடுபட்டு வந்தாலும் அக்காட்சியால் இதுவரை 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது. இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக பாமக உடன் கூட்டணியில் இருந்தாலும் கடந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்து களம் காணும் சூழ்நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது. அதில் பல இடங்களில் கணிசமாக வெற்றி பெற்றது. சென்னையில் பல இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு பாஜக முன்னேறியது. இது பாஜகவின் மிகப்பெரிய வெற்றியாகவே கருதப்படுகிறது.
இது ஒருபுறம் உள்ள நிலையில் மீண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக களத்தில் இறங்க உள்ளார். பாமக 2.0 என்ற திட்டத்துடன் அதற்கான அத்தனை வேலைகளிலும் அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பாஜகதான் தமிழ்நாட்டிலேயே சிறிய கட்சி என கூறியிருந்தார். இது பாஜகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அன்புமணி ராமதாஸின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர்களில் ஒருவரான கரு. நாகராஜன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், பாஜக கூட்டணியில் இருக்கும் அன்புமணி ராமதாசை பாஜக தமிழ்நாட்டில் சிறிய கட்சி என கூறியிருக்கிறாரே என முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, அன்புமணி ராமதாஸ் சொல்வதெல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது,
தமிழ்நாட்டில் சிறிய கட்சி பெரிய கட்சி என்ற பிம்பத்தை எல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு பாஜக வந்தபோது உடைத்து விட்டது. ஏன் சில இடங்களில் அதிமுகவையை பாஜக பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு வந்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் vs கம்யூனிஸ்ட், காங்கிரஸ் vs திமுக, திமுக vs அதிமுக என அரசியல் களம் அடுத்தடுத்து மாறி உள்ளது. அந்த மாற்றம் விரைவில் திமுக பாஜக என்ற நிலைக்கு வரும், பாஜகவுக்கு அடுத்துதான் பாமக நாம்தமிழர் எல்லாமே வரும், தேர்தலில் அந்த எழுச்சியை அனைவரும் பார்க்கத் தான் போகிறீர்கள் என அவர் கூறியுள்ளார். கூட்டணியில் உள்ள அதிமுகவை பாஜக பின்னுக்குத் தள்ளுகிறது என்ற பேச்சு எழத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது பாமக வையும் பாஜக விமர்சித்து பேசியிருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.