சுங்கச்சாவடிகளில் கொள்ளை.. மேலும் உயர்கிறது சுங்க கட்டணம்!! கொள்ளையை தடுக்க அன்புமணி அட்வைஸ்

Asianet News Tamil  
Published : Mar 26, 2018, 02:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
சுங்கச்சாவடிகளில் கொள்ளை.. மேலும் உயர்கிறது சுங்க கட்டணம்!! கொள்ளையை தடுக்க அன்புமணி அட்வைஸ்

சுருக்கம்

anbumani condemns toll fare hike

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் நடைபெறும் கட்டண கொள்ளைக்கு உடனடியாக முடிவு காண வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்படவிருக்கிறது. மக்கள் மீது பல வழிகளில் மறைமுகமாக சுமையை ஏற்றும் சுங்கக் கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 42 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளுக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. அடுத்தக்கட்டமாக இப்போது செங்கல்பட்டு, சேலம் ஆத்தூர், பள்ளி கொண்டா, வாணியம்பாடி, திருப்பெரும்புதூர் உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. எந்த வகையில் பார்த்தாலும் சுங்கக்கட்டண உயர்வை மட்டுமல்ல, சுங்கக் கட்டணம் வசூலிப்பதையே நியாயப்படுத்த முடியாது. இது மக்களை கொள்ளையடிக்கும் செயல் தான்.

உதாரணமாக செங்கல்பட்டு பரணூர் முதல் திண்டிவனம் வரையிலுள்ள 90 கிலோ மீட்டருக்கு ஆம்னி பேருந்துக்கு ரூ.195 சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேநேரத்தில் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் மீது சாலை வரியாக லிட்டருக்கு ரூ.8 வசூலிக்கப்படுகிறது. ஓர் ஆம்னி பேருந்து பரணூர் முதல் திண்டிவனம் வரையிலான 90 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க குறைந்தது 22 லிட்டர் டீசல் செலவாகும். ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.8 வீதம் 22 லிட்டர் டீசலுக்கு ரூ. 176 சாலை வரியாக வசூலிக்கப்படுகிறது.

இதுதவிர ஒவ்வொரு வாகனமும் புதிதாக வாங்கப்படும்போது, சாலை வரியாக பெருந்தொகை வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது அதற்கும் மேலாக சுங்கக்கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயமானதாக இருக்கும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை பயணிக்க ஒரு பேருந்து சுங்கக்கட்டணமாக ரூ.1,600, டீசல் மீதான சாலை வரியாக ரூ.1,400 என ரூ.3,000 செலுத்த வேண்டும். சராசரியாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.4.30 சாலைப் பயன்பாட்டு கட்டணமாக வசூலிப்பதை கொள்ளை என்று கூறாமல் வேறு எப்படி அழைக்க முடியும்?

தனியார் சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி, ஒரு நெடுஞ்சாலையை அமைப்பதற்கான முதலீடு எடுக்கப்பட்டுவிட்டால், அதன்பின் பராமரிப்புக்காக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் முதலீடு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

உதாரணமாக செங்கல்பட்டு பரணூர் சுங்கச்சாவடியில் செய்யப்பட்ட முதலீட்டை விட இரு மடங்குக்கும் கூடுதலாக எடுக்கப்பட்டு விட்டது. ஆனாலும், சுங்கக் கட்டண வசூலைக் குறைத்துக் காட்டி, அங்கு தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட தமிழகத்திலுள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளிலுமே இதே நிலை தான் காணப்படுகிறது. விண்ணை முட்டும் அளவுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், சாலைகளில் தரமோ மிக மோசமாகவும், விபத்துகளுக்கு வகைசெய்வதாகவும் உள்ளன.

சுங்கக் கட்டண உயர்வால் வாகன ஓட்டிகளும், உரிமையாளர்களும் மட்டும் பாதிக்கப்படுவதில்லை; மக்கள் தான் மிக அதிகமாக பாதிக்கப்படுவார்கள். சுங்கக்கட்டண உயர்வைத் தொடர்ந்து சரக்குக் கட்டணம் உயர்த்தப்படுவதாக சரக்குந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கணிசமாக உயரும்.

பொருளாதார மந்தநிலை காரணமாக மக்களின் வருமானம் குறைந்துள்ள நிலையில், செலவுகள் மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருவது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தாது.

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளைக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டியது அவசியமாகும். இதற்காக முதல் கட்டமாக சுங்கக்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இரண்டாம் கட்டமாக ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் தணிக்கையாளர்கள், மக்கள் அடங்கிய குழுவை அமைத்து சுங்கச்சாவடியின் வருவாயை பொதுத்தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

முதலீடு திரும்ப எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்புக்காக 20% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். ஏதேனும் நெடுஞ்சாலையில் முதலீட்டை திரும்ப எடுத்த பிறகும் முழுமையான கட்டணம் வசூலிக்கப்படுவது தணிக்கையில் கண்டறியப்பட்டால், அந்த சாலைகளில் சுங்கக்கட்டணத்தை அடியோடு ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

அமித் ஷா கையில் சிக்கிய குடுமி.. லாட்டரி அடிக்கும் புது கட்சி 2 சீட்டு..! கருவிலேயே சிதைந்த முதல்வர் கனவு..!
23ம் தேதி பிரதமருடன் மேடையேறும் டிடிவி தினகரன்..? மா.செ.களுடன் இன்று முக்கிய ஆலோசனை