
திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீது 30%கேளிக்கை வரி விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை கண்டித்து இன்று முதல் திரையரங்குகள்மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப் படுவதற்கு காரணமான தமிழக அரசின் புதிய வரிவிதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு அவை அமைந்துள்ள இடங்களைப் பொறுத்து அதிகபட்சமாக 35% வரை கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது,நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில், தமிழக அரசு மட்டும் இந்த வரியை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என தமிழக அரசு நினைத்தால் அதை மாநில அரசு தான் நிதி ஆதாரங்களில் இருந்து ஈடு செய்ய வேண்டுமே தவிர கூடுதலாக இன்னொரு வரி விதித்து திரையரங்குகள் மீதும், படம் பார்க்கும் மக்கள் மீதும் தேவையற்ற சுமையை சுமத்தக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
திரையரங்குகளிடமிருந்து கிடைக்கும் ஜி.எஸ்.டி வரி வருவாயில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய பங்கை வழங்காமல் இருப்பதற்காக இப்படி ஒரு நாடகத்தை தமிழக அரசு அரங்கேற்றுகிறது.
திரைப்படத்துறை என்றாலே அதில் சம்பந்தப்பட்டவர்கள் கோடிகளில் மிதப்பவர்கள் என்ற தவறான எண்ணம் உள்ளதாகவும், திரைத்துறையில் லட்சக் கணக்கான தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய வரி விதிப்பால் திரையரங்குகளும், திரைத்துறையும் பாதிக்கப்பட்டால் கூலித் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் எனவும், எனவே திரையரங்குகள் மீதான கேளிக்கை வரி விதிப்பை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.