"உத்தரபிரதேசத்தில் உள்ளவர்கள் மட்டும் தான் விவசாயிகளா?" - கடுப்பான அன்புமணி

First Published Mar 17, 2017, 12:16 PM IST
Highlights
anbumani condemns central govt behaviour


நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்ட நிலையில்  உத்தரபிரதேச விவசாயிகளின் பயிர்க்கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில்  பங்கேற்றுப் பேசிய உறுப்பினர்கள் பொதுத்துறை வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதே பிரச்சனையை தானும் வலியுறுத்தியதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார்,

மேலும்  தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளதாகவும் அன்புமணி தெரிவித்தார்.

தனது கேள்விக்கு பதிலளித்தப் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் இராதா மோகன் சிங், உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்கவில்லை என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை அம்மாநில அரசு தள்ளுபடி செய்யும் எனவும் அதனால், அம்மாநில அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும்’’ என மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் வாக்குறுதி அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் ஏதோ ஒரு வகையில் விவசாயத்தை சார்ந்திருக்கும் நிலையில், ஒரு மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க்கடன் தள்ளுபடி சலுகை வழங்குவது நியாயமற்றது என்று தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் விவசாயிகளா, தமிழகத்தில் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு நிர்கதியாக நிற்கும் இவர்கள் விவசாயிகள் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!