முதல்வர் பதவியை பழனிசாமி ராஜினாமா செய்யணும்!! போலீஸா.. இல்ல தீவிரவாதியா? அன்புமணி ஆதங்கம்

Asianet News Tamil  
Published : May 23, 2018, 10:58 AM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
முதல்வர் பதவியை பழனிசாமி ராஜினாமா செய்யணும்!! போலீஸா.. இல்ல தீவிரவாதியா? அன்புமணி ஆதங்கம்

சுருக்கம்

anbumani angry on tuticorin firing issue

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கொலை குற்றம் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 100 நாட்களாக குமரெட்டியாபுரம் உள்ளிட்ட சில பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் நூறாவது நாளான நேற்று, ஆயிரக்கணக்கானோர், போலீசாரின் தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்றனர். 

போராட்டக்காரர்களை தடுப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்களும் பதிலுக்கு கற்களை வீசி தாக்கினர். இதனால் போராட்டம் வன்முறையாக வெடித்தது. போராட்டக்காரர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களே எதிர்பார்க்காத வகையில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில், 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த கோர சம்பவம் மக்களிடையே கடும் கோபத்தையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிருக்காக போராடிய மக்களின் உயிரை பறித்த போலீசாரின் செயல், ஒட்டுமொத்த மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என்ற கேள்வி மக்கள் மனதில் பிரதானமாக எழுந்துள்ளது. 

இந்நிலையில், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அன்புமணி, சுத்தமான காற்று மற்றும் நீரை மக்களுக்கு கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதற்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது 302 பிரிவின் கீழ் கொலை குற்றம் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாயும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தை வைத்து, தூத்துக்குடி, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய சிப்காட்டுகளை ஆய்வு செய்து, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் ஆலைகளுக்கு கடும் நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அன்புமணி, மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் லஞ்சம், ஊழலை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மக்கள் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை. பதவிதான் முக்கியம். டெல்லியிலிருந்து சொல்வதை கேட்டு அப்படியே செயல்படுகிறது எடப்பாடி அரசு. அடுத்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சொந்த தொகுதியில் டெபாசிட் இழப்பார் என அன்புமணி ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸார், சீருடையில் இல்லை. வெளிமாவட்டங்களிலிருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு அவர்கள் போலீஸா? அல்லது தீவிரவாதிகளா?என கேள்வி எழுப்பிய அன்புமணி, இதுதொடர்பாக மனித உரிமை ஆணையத்தை பாமக அணுகப்போவதாகவும் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியை கவிழ்க்க ஓபிஎஸ்... ஸ்டாலின் அதிரடி வியூகம்..! தென்மாவட்டங்களில் செக்..!
உன் அழகில் மயங்கியே உன் கணவருக்கு வேலை கொடுத்தேன்..! அதிகாரியின் மனைவி மீது ஆசைப்பட்ட டிரம்ப் வீடியோ.!