
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறத்தது உண்மைதான் என்று நேற்று அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஜெ.வின் அத்தை மகள் லலிதா, அந்த பெண் குழந்தைக்கு தந்தை தெலுங்கு நடிகர் சோபன் பாபு தான் என அடுத்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற இளம்பெண் தான் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்றும் , தன்னை அவரது மகளாக அங்கீகரித்து, ரத்த வாரிசாக அறிவிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதினார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அம்ருதா, கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி ஜெயலலிதாவின் மகளாக பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். ஜெயலலிதா தனக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் சிறுவயதிலே என்னை பார்த்தசாரதி - ஷைலஜா தம்பதிக்கு தத்து கொடுத்துவிட்டார். எனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடைசி வரை என்னை மகளாக அறிவிக்கவில்லை, என நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் உச்சநீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து, பெங்களூரு நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தியது.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு பிரசவம் பார்த்ததாக சொல்லப்படும் ஜெயலட்சுமியின் உறவினர் மகள் லலிதா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எனது அம்மாவின் அண்ணன் மகள். ஜெயலலிதாவின் குடும்பத்தார் எங்களுக்கு குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் என்பதால், சிறுவயதில் இருந்தே பல விஷயங்கள் எங்களுக்கு தெரியும். ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது, அவருக்கு ஒருவருடன் தொடர்பு இருந்தது. அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் எனவும் தெரிகிறது.
இதன்மூலம் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஜெயலலிதாவின் பிரசவத்தின்போது, அருகில் இருந்து உதவியவர் என் பெரியம்மா ஜெயலட்சுமிதான். இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என ஜெயலலிதா என் பெரியம்மா ஜெயலட்சுமியிடம் சத்தியம் வாங்கி கொண்டார். இதனால் என் பெரியம்மா இதனை வெளியே சொல்லவில்லை. நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே இந்த விஷயம் தெரியும் என்று றேந்நு ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
ஜெயலலிதா தனக்கு பிறந்த பெண் குழந்தையை அவரது நெருங்கிய உறவினரிடம் வளர்க்க கொடுத்தார். அந்த குழந்தை அம்ருதாவா எனக்கு தெரியாது. சந்தேகம் இருந்தால் டிஎன்ஏ சோதனை செய்து பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு பிறந்ததாக கூறப்படும் பெண் குழந்தைக்கு தெலுங்கு நடிகர் சோபன்பாபு தான் தந்தை எனவும் இன்று மேலும் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லலிதா, சென்னை மயிலாப்பூரில் உள்ள வீட்டில் ஜெயலலிதாவும், நடிகர் சோபன் பாபுவும் வாழ்ந்து வந்ததாகவும், அங்கிருந்தவர்கள் அதை உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு பிறந்நததாக கூறப்படும் அந்த பெண் குழந்தைக்கு சோபன்பாபுதான் தந்தை என்றும் லலிதா உறுதியாக தெரிவித்தார்.
இது குறித்த நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் லலிதா தெரிவித்தார்.