
தமிழகம் முழுவதும் அரசு நடத்தி வரும் மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் இழுத்து மூட உத்தரவிட்டுள்ள உயர்நிதிமன்ற மதுரை கிளை, படிப்படியாக கிரானைட் குவாரிகளையும் மூட வேண்டம் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிரானைட் கற்களை வெட்டியெடுத்து, பாலிஷ் செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் நடந்துவருகிறது. இதில் மதுரை மாவட்டத்திலுள்ள கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, செம்மினிபட்டி ஆகிய நான்கு பகுதிகளில் மட்டும் 83 கிரானைட் குவாரிகள் முறைகேடாக நடந்து வந்ததையும் அக்குவாரிகளில் இருந்து 39,30,431 கன மீட்டர் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்டதால், தமிழக அரசுக்கு 16,338 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதையும் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் அரசுக்கு அறிக்கையாக அளித்தார்.
அந்த அறிக்கையிலேயே, அறிவியல்பூர்வமான நவீனகாலத் தொழில்நுட்ப உதவியோடு ஆய்வு செய்தால் இந்த நிதியிழப்பு இன்னும் ஒரு மடங்கு கூடுதலாக இருக்க வாய்ப்புண்டு” என்றும் சகாயம் குறிப்பிட்டிருந்தார்..
இதோடு மற்ற மாவட்டங்களில் நடந்துள்ள கிரானைட் கொள்ளையை, அக்கற்களின் சந்தை மதிப்பின்படி கணக்கிட்டுப் பார்த்தால் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தோராயமாக பத்து இலட்சம் கோடி ரூபாயைத் தொடக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுக்கு வருவாய் இழப்பு என்பது ஒரு புறம் இருக்க கிரானைட் கொள்ளையால் சாதாரண மக்கள் சந்தித்துள்ள பாதிப்புகளும், அவலங்களும், இயற்கை நாசப்படுத்தப்பட்டிருப்பதும் எண்ணிப்பார்க்க முடியாதது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று பிறப்பித்த அதிரடி உத்தரவில், தமிழகத்தில் அரசு நடத்தி வரும் அனைத்து மணல் குவாரிகளையும் அடுத்த 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் தமிழகத்தின் ஆறுகளையும், இயற்கை வளங்களையும் காக்கும் வகையில் மணல் குவாரிகளுக்கு முற்றிலும் தடைவித்தது. இந்த உத்தரவின் தொடர்ச்சியாக , தமிழகத்தில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் படிப்படியாக மூட வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், ஜல்லிக்காக மட்டுமே குவாரிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை தமிழக அரசு உறுதிபடுத்த வேண்டும் என்றும் இதனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.
மணல் மாஃபியாக்களுக்கு மட்டுமல்ல கிரானைட் கொள்ளையர்களுக்கும் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.