அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த புகழேந்தி... கூவத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன் என ஹேப்பி!

By Asianet TamilFirst Published Jan 7, 2020, 7:30 AM IST
Highlights

“சிறிது காலம் கூவம் நதி போன்ற சாக்கடையில் மிதந்தேன். உண்மையை அறிந்த பிறகு அங்கிருந்து வெளியேறி அதிமுகவில் தொண்டராக இணைந்துள்ளேன். தினகரன் தோல்வி அடைந்துவிட்டார். அமமுகவில் இப்போது யாரும் இல்லை. அங்கிருந்து அனைவரும் வெளியேறிவிட்டார்கள். தினகரன் முகவரி இல்லாமல் போய் விட்டார்."
 

கடந்த சில மாதங்களாக அமமுகவில் தினகரனுக்கு எதிராக வாள் சுழற்றிய புகழேந்தி, ஒரு வழியாக தாய்க் கழகமான அதிமுகவில் இணைந்தார்.


 அதிமுக இரண்டாக பிளவுப்பட்டபோது சசிகலா, தினகரன் பின்னால் அணிவகுத்தார் புகழேந்தி. அமமுக கட்சி தொடங்கவும் உதவியாக இருந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலிலும், 22 இடைத்தேர்தலிலும் அமமுக படுதோல்வி அடைந்தது. ஓசூர் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் களம் கண்ட புகழேந்தி, சுமார் 1500 ஓட்டுகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிருப்தி அடைந்த புகழேந்தி, தினகரனை விமர்சிக்கத் தொடங்கினார். அதிமுக மீது பாச மழை பொழிய தொடங்கினார். மேலும், அமமுகவை கட்சியாகப் பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்துக்கு சென்றார். அதிமுகவில் இணையாமல், தினகரனுக்கு எதிராக புகழேந்தி கண்ணாமூச்சி ஆட்டம் நடத்திவந்தார்.
இந்நிலையில் புகழேந்தி அதிமுக கட்சி அலுவலகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோரைச் சந்தித்து அதிமுகவில் முறைப்படி இணைந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிறிது காலம் கூவம் நதி போன்ற சாக்கடையில் மிதந்தேன். உண்மையை அறிந்த பிறகு அங்கிருந்து வெளியேறி அதிமுகவில் தொண்டராக இணைந்துள்ளேன். தினகரன் தோல்வி அடைந்துவிட்டார். அமமுகவில் இப்போது யாரும் இல்லை. அங்கிருந்து அனைவரும் வெளியேறிவிட்டார்கள். தினகரன் முகவரி இல்லாமல் போய் விட்டார்.


தமிழக முதல்வர் பல இடங்களில் பாலம் போட்டு அழகு பார்த்துவருகிறார். எதிர்க்கட்சிகளோ கோலம் போட்டு எதிர்க்கின்றன. வர உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எல்லா இடங்களிலும் அதிமுக பெரும் வெற்றி பெறும். உள்ளாட்சி வேறு கட்சியும் ஆட்சியில் வேறு கட்சியும் இருந்தால் நன்றாக இருக்காது” என்று புகழேந்தி தெரிவித்தார்.

click me!