அதிமுக திமுகவுக்கு இணையானது அமமுக.. டிடிவியை தலையில் வைத்து கொண்டாடும் தெகலான் பாகவி.

By Ezhilarasan BabuFirst Published Apr 2, 2021, 10:31 AM IST
Highlights

ஏதோ சடங்கு சம்பிரதாயமாக எனக்கு பிடித்த சின்னம் எனக்கு பிடித்த கட்சி என்று  யாரையாவது வெற்றிபெற செய்துவிட்டு ஐந்தாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர் காணவில்லை என்ற நிலைமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்

ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம் கிராமத்தில் SDPI கட்சியின்  தேசிய துணைத்தலைவர் தெகலான் பாக்கவி குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் அமமுக ,தேமுதிக, மருது சேனை உட்பட கூட்டணி சார்பில் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் அச.உமர் பாரூக் போட்டியிடுகிறார். இதையொட்டி எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் உமர்பாரூக் தனது ஆதரவாளர்களுடன் சோலூர்,ஐய்யனூர், பெரியங்குப்பம், நாச்சியார் குப்பம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். 

மேலும் பெரியாங்குப்பம் பகுதியில் SDPI கட்சியின்  தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாக்கவி உமர் பாருக்கை ஆதரித்து குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி என்பது திமுக ,அதிமுக விற்கு இணையான கூட்டணியாக தற்போது உள்ளது. டிடிவி தினகரன்தான் இந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கிறார். தமிழகம் முழுவதும் அவர் செல்கின்ற இடமெல்லாம் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி இந்த கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் உமர்பாருக் அவர்கள்  இந்த சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது நமது சமூகக் கடமை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

ஏறக்குறைய 40 ஆண்டு காலம் மக்கள் பணியில் சமூகப் பணியிலும் அரசியல் பணியிலும் மக்களுக்காக சேவை செய்து ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் கண்ணீரைத் துடைக்கின்ற பணியில் தொடர்ச்சியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு களத்தில் இருக்கின்ற ஒரு களப் போராளி தான் 
இந்தத் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஏதோ சடங்கு சம்பிரதாயமாக எனக்கு பிடித்த சின்னம் எனக்கு பிடித்த கட்சி என்று யாரையாவது வெற்றிபெற செய்துவிட்டு ஐந்தாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர் காணவில்லை என்ற நிலைமையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். 

கடந்த முறை வெற்றி பெற்றவர் இந்த தொகுதிக்கு என்ன செய்தார் என்பதையும் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.ஆகையால் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் உமர் பாருக் அவர்களுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என்றார். 

 

click me!