நான் சொன்னதை எல்லோரும் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க !! திடீர் பல்டி அடித்த அமித்ஷா !!

By Selvanayagam PFirst Published Sep 18, 2019, 8:22 PM IST
Highlights

இந்தி மொழி குறித்து தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என   மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா தனது டுவிட்டரில் , இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். 

தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்' என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக தலைவர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட பல தலைவர்கள் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்தி மொழி  விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.  அதில் தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன்.

எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. மொழிகளை வலிமைப்படுத்த தவறினால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போல் நமது மொழி எது என்று தெரியாமல் போகும்.  

நான் எப்போதும் சொல்வது போல, இந்திய மொழிகளை வலிமைப்படுத்த வேண்டும். தனது தாய்மொழியில் படிக்கும் போதுதான் ஒரு குழந்தையால் நன்றாக படிக்க முடியும்.

நானே இந்தி அல்லாத குஜராத்தில் இருந்து வருகிறேன். சிலர் அரசியல் செய்ய விரும்பினால், அது அவர்களின் விருப்பம் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

click me!