
பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா, தற்போது தமிழ் கற்று வருகிறாராம். அதற்குக் காரணம், தமிழகத்தில் கட்சியைக் காலூன்றவும் கை ஊன்றவும் வைக்கும் குறிக்கோள் தானாம்... தமிழகத்தில் கவர்ச்சிகரமான மேடைப் பேச்சாலும் மொழி உணர்வைக் கொண்டுமே திராவிடக் கட்சிகள் இங்கே ஆட்சியைப் பிடித்து அறுபதாண்டுகளுக்கும் மேலாகக் கோலோச்சி வருகின்றன. எனவே தமிழ் மொழியைக் கற்று மேடைகளில் கலக்க வேண்டும் என்று யோசித்துள்ளார் அமித் ஷா. அதனால், தமிழைக் கற்றுக் கொண்டு வருகிறாராம்.
தமிழகம் மட்டுமல்ல, மேற்கு வங்கத்திலும் கூட பா.ஜ.க.வின் தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று திட்டம் தீட்டியுள்ளார் அமித் ஷா என்கிறார்கள். எனவேதான், அவர், தமிழ் மொழி மட்டுமல்லாது, வங்கமொழியும் கற்று வருகிறார் என்கிறார்கள் கட்சியினர்.
அமித் ஷாவின் தற்போதைய இலக்கு, தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள்தான் என்றும், இங்கே ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று அமித் ஷா விரும்புவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
வடகிழக்கு மாநிலங்களில் அண்மைக் காலங்களில் பலத்த எதிர்ப்பையும் மீறி, பாஜக., வெற்றி பெற்றுள்ளது. அதற்கு, அரசியல், சமூகம், மத ரீதியான கலாச்சாரங்கள் ஆகியவற்றில் அமித் ஷாவுக்கு இருந்த ஆழ்ந்த பார்வை தான் காரணம் என்கிறார்கள். இங்கே கம்யூனிஸ்டுகள், பிரிவினைவாதிகள், மதவாத மிஷனரி சர்ச்கள் என பல தரப்பு தாக்குதல்களையும் கடந்து, பா.ஜ.க. காலூன்ற வகை செய்தது என்று கூறும் அமித் ஷா ஆதரவாளர்கள், இதேபோல் தமிழகம், மேற்கு வங்கத்திலும் பா.ஜ.க.வின் தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே, அமித் ஷா தமிழ் மற்றும் வங்கமொழி பயின்று வருகிறார் என்று கூறுகிறார்கள். அமித் ஷாவுக்கு தொழில் முறை ஆசிரியர்கள் மொழிப் பாடங்களைக் கற்றுக் கொடுத்து வருகிறார்களாம். எனவே கூடிய விரைவில், அமித் ஷாவே கூட திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதி ஒரு நூல் வெளிவர வாய்ப்பிருக்கிறது!