மே.வங்காள தலைமை செயலாளர், டிஜிபிக்கு சம்மன் அனுப்பிய அமித்ஷா அமைச்சகம்... தூக்கி தூரப் போட்ட மம்தா அரசு..!

By Asianet TamilFirst Published Dec 11, 2020, 9:55 PM IST
Highlights

 பாஜக தேசிய  தலைவர் ஜே.பி. நட்டா பாதுகாப்பு வாகனத்தின் மீது நடந்த தாக்குதல் குறித்து மேற்கு வங்க தலைமை செயலாளரும் டிஜிபியும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசு சம்மன் அனுப்பிய நிலையில், அந்த சம்மனை ஏற்று இருவரையும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப் போவதில்லை என்று மம்தா பானர்ஜி அரசு முடிவு செய்துள்ளது.
 

மேற்கு வங்காளத்தில் எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. எனவே, அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் பிரசாரம் செய்துவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்கத்துக்கு இரு தினங்களுக்கு முன்பு சென்றார். கொல்கத்தாவிலிருந்து டைமண்ட் ஹார்பர் தொகுதிக்கு நட்டா  சென்றபோது, அவருடைய பாதுகாப்பு வாகனத்தின் மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினார்கள் என்று பாஜக கூறுகிறது. ஆனால், இது பாஜகவின் திட்டமிட்ட நாடகம் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டிவருகிறது.
இந்தத் தாக்குதலால் கடும் அதிருப்திக்கு உள்ளான மத்திய அரசு, மேற்கு வங்க அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டிருந்தது. மேலும், மேற்கு வங்கத்தின் சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் ஜெகதீப் தனகர் அறிக்கை அனுப்பினார். ஆளுநர் அறிக்கையைப் பெற்ற உடனே  வரும் 14-ம் தேதி மேற்கு வங்கத் தலைமைச் செயலாளரும் டிஜிபியும் நேரில் ஆஜராகி சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்தும், ஜே.பி. நட்டா கார் மீது நடந்த தாக்குதல் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.


ஆனால், இந்த சம்மனை ஏற்று தலைமைச் செயலாளரும் டிஜிபியையும் டெல்லிக்கு அனுப்ப போவதில்லை என மம்தா பானர்ஜி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் அலாபன் பந்தோபத்யாயே, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், “வரும் 14-ம் தேதி மாநில அரசு சார்பில் ஆலோசனைக் கூட்டம் உள்ளது. மாநில அரசின் அந்த உத்தரவுக்கு நான் பணிந்து நடக்க வேண்டும். நட்டா விவகாரம் தொடர்பாக அறிக்கைகள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து மாநில அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து அதைக் களைய நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, 14-ம் தேதி உங்கள் சம்மனை ஏற்று நான் நேரில் வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
 

click me!