அமித் ஷா சென்னை வருகை... ஒரே காரில் ஓபிஎஸ் – இபிஎஸ் பயணம்..! அதிமுக போடும் தேர்தல் கணக்கு..!

By Selva KathirFirst Published Jan 5, 2021, 1:47 PM IST
Highlights

அதிமுக நிர்வாகிகள் யாரும் இல்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் ஒரே காரில் தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரை பயணித்திருப்பது அதிமுகவின் புதிய தேர்தல் கணக்கை இறுதி செய்யவே என்கிறார்கள்.

அதிமுக நிர்வாகிகள் யாரும் இல்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் ஒரே காரில் தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரை பயணித்திருப்பது அதிமுகவின் புதிய தேர்தல் கணக்கை இறுதி செய்யவே என்கிறார்கள்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாலும் கட்சி முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ளது என்றே கூறலாம். மாவட்டச் செயலாளர்கள் துவங்கி மாநில நிர்வாகிகள் வரை அனைவரும் ஒரே மனதாக எடப்பாடியை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என்பது தான். அதே சமயம் கட்சியில் தனக்கு என்று ஆதரவாளர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் என கணிசமான நிர்வாகிகள் ஓபிஎஸ் எடுக்கும் முடிவை ஏற்க தயாராக உள்ளனர். இது தவிர ஓபிஎஸ் சார்ந்துள்ள முக்குலத்தோர் சமுதாய நிர்வாகிகளும் அவரை பின்பற்றி வருகின்றனர்.

அதிமுகவில் ஓபிஎஸ்சுக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்றாலும் அவரது அதிருப்தி கட்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எடப்பாடிக்கு தெரியும். எனவே தான் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஒட்டு மொத்த அதிமுகவும் எடப்பாடிக்கு பின்னால் இருந்த போதும் ஓபிஎஸ்சை சம்மதிக்க வைக்க பெரும் பிரயத்தனம் நடந்தது. ஒரு வழியாக ஓபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றுக் கொண்டாலும் அதனை அவர் முழு மனதாக ஏற்கவில்லை என்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலை தனது அரசியல் எதிர்காலத்திற்கான மிக முக்கிய அடித்தளமாக ஓபிஎஸ் கருதுகிறார்.

இந்த தேர்தலில் அதிமுக மறுபடியும் வென்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகிவிட்டால் அக்கட்சி முழு அளவில் எடப்பாடி வசம் செல்ல வாய்ப்புள்ளது. அதிமுக தோல்வியை தழுவினால் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைக்க ஓபிஎஸ்க்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இதனை எல்லாம் மனதில் வைத்து தான் ஓபிஎஸ் தேர்தல் கணக்கு போட்டு வருகிறார். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்திருந்தால் அவர் மூலமாக எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க ஓபிஎஸ் சில திட்டங்களை தீட்டியிருந்ததாகவும் ரஜினி தற்போது பின்வாங்கிவிட்டதால் ஓபிஎஸ் வேறு சில வாய்ப்புகளை யோசித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

இதே போல் சட்டமன்ற தேர்தலில் திமுகவை தனியாக எதிர்க்க அதிமுகவிற்கு பலம் இருந்தாலும் தேர்தல் பணிகள் பிரச்சனையின்றி நடைபெற மத்தியில் ஆளும் பாஜக அரசின் தயவு தேவை என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இதனால் தான் கூட்டணி விவகாரத்தில் பாஜக பிடிகொடுக்காமல் இருந்தாலும் எடப்பாடி அவர்களை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார். பாஜக மேலிடத்துடன் எடப்பாடியை காட்டிலும் ஓபிஎஸ் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போதைய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தமிழகத்தில் பாஜகவின் நலன்களை திரைமறைவில் கவனிக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்கள் எடப்பாடியை விட ஓபிஎஸ்சையே நம்புகிறார்கள்.

இந்த வகையில் பாஜக மேலிடத்துடன் பேச ஓபிஎஸ்சை சம்மதிக்க வைக்கவே ஒரே காரில் அவருடன் எடப்பாடி பயணித்ததாக கூறுகிறார்கள். வேறு எங்காவது தனியாக சந்தித்து பேசினால் அது தேவையற்ற வதந்திகளை உருவாக்கும் என்பதால் தான் தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு ஒரே காரில் இருவரும் பேசியபடி சென்றதாக சொல்கிறார்கள். அப்போது, பாஜகவை கூட்டணிக்கு சம்மதிக்க வைப்பதுடன் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிக்க ஏற்பாடு செய்யுமாறு ஓபிஎஸ்சிடம் எடப்பாடி கேட்டுக் கொண்டதாகவும் இதற்கு பிரதிபலனாக அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் வேட்பாளர்களை ஓபிஎஸ் தேர்வு செய்து கொள்ளலாம் என்கிற டீலை எடப்பாடி முன் வைத்ததாக சொல்கிறார்கள்.

ஆனால் வேட்பாளர் தேர்வை பொறுத்தவரை இருவரும் சேர்ந்தே அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்றும் கூட்டணியை பொறுத்தவரை பாஜகிவிடம் தான் பேசத்தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக என்ன நினைக்கிறது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் பிடிகொடுக்காமலேயே ஓபிஎஸ் பேசியதாக சொல்கிறார்கள். ஆனால் பாஜகவுடனான கூட்டணி விஷயத்தில் அதிமுகவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பேச்சுவார்த்தையை நடத்தி முடிக்க வேண்டும் என்றால் ஓபிஎஸ் தயவு தேவை என்பதை தற்போது எடப்பாடி பழனிசாமி புரிந்து கொண்டிருக்கிறார்.

விரைவில் அமித் ஷா சென்னை வர உள்ளார். அப்போது அதிமுக – பாஜக தொகுதி உடன்பாட்டை முடித்துக் கொள்வதில் எடப்பாடி உறுதியுடன் உள்ளார். அதே போல் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்திலும் பாஜக உறுதியாக தன்னை ஆதரிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். இவற்றை எல்லாம் மனதில் வைத்து ஓபிஎஸ் மனநிலையை அறிந்து கொண்ட எடப்பாடி இனி அதற்கு ஏற்ப காய் நகர்த்துவார் என்கிறார்கள்.

click me!