வரிசை கட்டும் ஆம்புலன்ஸ்கள்.. அடுத்தடுத்து உயிர்பலி.. விஜயபாஸ்கர் இல்லையே? ஏங்கும் அதிகாரிகள்..!

By Selva KathirFirst Published May 13, 2021, 11:08 AM IST
Highlights

சென்னையை ஒரு சுனாமி போல கொரோனா தாக்கியுள்ள நிலையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தடுப்பு பணிகளை தற்போதைய பணிகளுடன் ஒப்பிட்டு சென்னைவாசிகள் ஏக்கம் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையை ஒரு சுனாமி போல கொரோனா தாக்கியுள்ள நிலையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தடுப்பு பணிகளை தற்போதைய பணிகளுடன் ஒப்பிட்டு சென்னைவாசிகள் ஏக்கம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா கண்டறியப்பட்டது முதல் ஓய்வில்லாமல் உழைத்தவர் விஜயபாஸ்கர். கொரோனாவை எதிர்த்து போரிட மிக முக்கிய தேவையான முழு ஊரடங்கை சிறப்பாக அமல்படுத்தியதில் விஜயபாஸ்கரின் யோசனைகள் மிக முக்கியம். இதே போல் மருத்துவரான விஜயபாஸ்கருக்கு கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களுக்கு என்ன தேவை, செவிலியர்களுக்கு என்ன தேவை? கொரோனா அதிகரித்தால் என்ன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்திய நுட்பம் இருந்தது. இதே போல் கொரோனாவை கண்டுபிடிக்க முதல் தேவையாக இருந்தது ஆர்டிபிசிஆர் டெஸ்ட் தான்.

கொரோனா தமிழகத்தில் தலையெடுக்கத் தொடங்கியதும் முதலில் விஜயபாஸ்கர் செய்தது டெஸ்டிங்கை அதிகப்படுத்தியது. இதற்காக நேரடியாக தென்கொரியாவில் இருந்து கொரோனா டெஸ்டிங் கிட்டுகளை இறக்குமதி செய்திருந்தார் விஜயபாஸ்கர். மேலும் கொரோனா உறுதியாகும் நபர்களின் வீடுகளுக்கு முன்பு அதற்கான எச்சரிக்கை நோட்டீசை ஒட்டும் முறையையும் விஜயபாஸ்கர் துணிந்து அறிமுகப்படுத்தினார். அத்தோடு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு நகராட்சி, மாநகராட்சி, சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை வழங்கி அவர்களை வெளியே நடமாடவிடாமல் தடுக்கும் பணியிலும் விஜயபாஸ்கர் ஈடுபட்டார்.

அத்தோடு அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்களை ஏற்படுத்தி தொற்று அறிகுறி உள்ளவர்களை தனியாக பிரித்து அவர்களுக்கு கொரோனா இருந்தால் உடனடி சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை, மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா அறிகுறி உள்ளதா என தினந்தோறும் பரிசோதிக்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டது. விஜயபாஸ்கரின் இந்த நடவடிக்கைகளால் கொரோனா தொற்று உள்ளவர்களை எளிதில் கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

அது மட்டும் அல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் விஜயபாஸ்கர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆலோசனை நடத்தினார். மேலும் சென்னையில் கொரோனா நோயாளிகள் அதிகம் இருந்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையில் விஜயபாஸ்கரை அதிகம் பார்க்க முடியும். அங்கு தேவையான அளவிற்கு ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அப்போதே விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். இதனால் தான் கொரோனா முதல் அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறை என்கிற பேச்சே தமிழகத்தில் எழவில்லை.

இது தவிர நள்ளிரவு நேரத்தில் கூட திடீரென மருத்துவமனைகளுக்கு சென்று விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்போது பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களை அவர் ஊக்கப்படுத்தினார். அத்தோடு கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் ரூம் எடுத்துக் கொடுத்து அவர்களை சிறப்பாக கவனிப்பதில் பெரும் பங்கு எடுத்துக் கொண்டார். அதோடு கொரோனா அறிகுறியுடன் வருபவர்களுக்கு டெஸ்ட் எடுக்க ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி நடமாடும் வாகனங்கள் வரை ஏற்பாடு செய்தார்.

இப்படி கடந்த காலங்களில் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்ற காரணத்தினால் ஒரு பேரழிவை  மக்கள் தவிர்த்திருந்தனர். ஆனால் கடந்த பத்து நாட்களாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் நோய் பாதிப்பில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் கொரோனா தடுப்பு பணிகளில் தற்போது ஏற்பட்டுள்ள சுணக்கம் தான் என்கிறார்கள். அதனால் தான் சென்னைவாசிகள். சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடங்கி மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் வரை அனைவரும் ஒரே வார்த்தையில் மிஸ் யூ விஜயபாஸ்கர் சார் என்று கூறி வருகிறார்கள்.

click me!