
அவிநாசியில் தனபால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுகவிலிருந்து நான் மாற்று கட்சிக்கு செல்ல போவதாக வாட்ஸ்அப்பில் வலம் வரும் வதந்தியை மறுக்கிறேன். இதை வன்மையாக கண்டிக்கிறேன். 1972-இல் மாணவ பருவத்திலிருந்து அதிமுகவில் இருந்துவருகிறேன். என்னுடைய 45 ஆண்டுகால வரலாறு தெரியாமல் யாரோ வாட்ஸ்அப்பில் தவறான தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். எந்த நிலையிலுமே எந்த மாற்றத்தையுமே விரும்பாதவன் நான். இதுவரை எந்தப் பதவியையும் நான் பெரிதாக விரும்பியது இல்லை.
இந்த இயக்கம் என்னை 7 முறை எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக, துணை சபாநாயகர், சபாநாயகராக அழகுபார்த்துள்ளது. இந்த இயக்கம் என்னை நன்றாகவே வைத்திருக்கிறது. இந்த இயக்கம் என்னைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. ஆகவே இந்த இயக்கத்துக்கு எப்போதுமே நான் விசுவாசியாக இருப்பேன். இது போன்ற வதந்திகளுக்கு என் வாழ்க்கையில் இடமே இல்லை. இனிமேலாவது இதுபோன்ற வதந்திகள் வராது என நான் நிச்சயம் நம்புகிறேன்.” என்று தனபால் கூறினார்.