ஆளுநர் எதிராக இருந்தாலும் எதிர்க்கும் பேராற்றல் பெற்றவர் நம் முதல்வர்.. மு.க ஸ்டாலினை கொண்டாடும் திருமாவளவன்.

By Ezhilarasan BabuFirst Published May 7, 2022, 3:19 PM IST
Highlights

நீட் விவகாரத்தில் ஆளுநர் எதிராக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் பேராண்மை பெற்றவராக முதல்வர் ஸ்டாலின் உள்ளார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

நீட் விவகாரத்தில் ஆளுநர் எதிராக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் பேராண்மை பெற்றவராக முதல்வர் ஸ்டாலின் உள்ளார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதை திமுக அரசு என்பதை விட சமூக நீதி அரசு என்று சொல்லக்கூடிய வகையில் அதன் செயல்பாடுகள் உள்ளது என்றும் அவர்  கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது ஆட்சியையும் அவர் வரவேற்று  பாராட்டினார். திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது, இந்த ஓராண்டு ஆட்சியில் அனைத்து தரப்பு  மக்களின் பாராட்டை பெறக்கூடிய வகையில் முதலமைச்சர் பணிபுரிந்துள்ளார். நிர்வாகத்தில் ஆட்சியில் நீண்ட அனுபவம் பெற்றவர், சிறந்த நல்லாட்சி நிர்வாகத்தை ஓராண்டு காலத்தில் வழங்கியுள்ளார்.

இந்திய அளவில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பாராட்டக்கூடிய வகையில் அவரது செயல்பாடுகள் இருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அவரை மனமார பாராட்டுகிறேன். இதை திமுக அரசு என்பதை விட சமூக நீதி அரசு எனக் கூறலாம். அனைத்து தரப்பு விளிம்பு நிலை மக்களும் அதிகாரம் பெறுவதற்கான செயல்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். பெரியார் அண்ணா கலைஞர் வழியில் ஏழை எளிய மக்களுக்கு சமூக நீதி, உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி சுகாதாரம் கிடைக்க பாடுபடுகிறார். ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறை காட்டுகிறார். இலங்கையில் உள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க முன்வந்திருப்பது உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்திட நடவடிக்கை எடுத்தவர் முதல்வர் ஸ்டாலின், நீட் விலக்கு கேட்டு இரண்டு முறை சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அது அனுப்பப்பட்டுள்ளது.

ஆளுநர் அதற்கு எதிராக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் பேராண்மை பெற்றவராக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். ஆளுநர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பிய சில மணி நேரங்களில் அமைச்சரவையை கூட்டி இரண்டாவது முறையாக நீட் விலக்கு பெற தீர்மானம் நிறைவேற்றினார். தமிழகத்தில் முதல்முறையாக எஸ்சி எஸ்டி ஆணையம் அமைத்தார், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க மதவாத சக்திகள் களமிறங்கியுள்ளனர். மத பிரச்சினைகளைப் பெரிதாக பார்க்கிறார்கள். ஆனால் அரசு வன்முறையை தூண்டும் சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறியுள்ளார். 
 

click me!