அதிமுகவுடன் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை.?? கூட்டணிக்குள் வெடி வைத்த எல்.முருகன். ரஜினிக்கு சாமரம்.

By Ezhilarasan BabuFirst Published Dec 4, 2020, 1:04 PM IST
Highlights

அதிமுகவுடனான கூட்டணி உறுதியா என்பதை அகில இந்திய தலைமை முடிவு செய்யும். ரஜினியுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்டவை குறித்தும் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.

அதிமுகவுடன் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை, எனவும்  தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனவும் பாஜக தலைவர் முருகன் கூறியுள்ளார்.மேலும் நடிகர் ரஜினிகாந்த் தேசப்பற்றாளர், தேசிய பார்வை கொண்டவர் என்றும்  அவர் கட்சி தொடங்குவது அவரது  உரிமை எனவும் எல் முருகன் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவுடனான கூட்டணி உறுதியா என்பதை அகில இந்திய தலைமை தான்முடிவு செய்யும் என்று அவர் கூறியுள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர், 

பாஜக சார்பில் கடந்த நவம்பர் 6 ஆம் தேதி வெற்றிவேல் யாத்திரை துவங்கியது, பல்வேறு நபர்கள் இந்த யாத்திரையை நடத்த கூடாது என்றும் இந்த யாத்திரை நடந்தால் தமிழகத்தில் கலவரம் ஏற்படும் என்று கூறிய நிலையிலும் மக்களின் வரவேற்போடு இந்த யாத்திரை நடைபெற்றது, 6 படை வீடுகளில் 2 படை வீடுகளுக்கு நாங்கள் சென்று இருந்தோம். தமிழகத்தில் ஏற்பட்ட புயலின் காரணமாக யாத்திரை நடைபெறாமல் உள்ளது, இருப்பினும் அடுத்த 3 நாட்களில் 4 படை வீடுகளுக்கு செல்ல உள்ளதாக தெரிவித்த அவர் டிசம்பர் 7 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் நிறைவு பெறுவதாக தெரிவித்தார். 

மேலும் இதில் மத்திய பிரதேச முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளார் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாஜக விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் திருத்த சட்டத்தை கொண்டு வந்து உள்ளது, இதுகுறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த பல்வேறு கருத்தரங்கங்கள் பாஜக சார்பாக நடைபெற்றது. தற்போது மீண்டும் இதனை வைத்து திமுக அரசியல் செய்ய நினைக்கின்றனர், தமிழகத்தில் உள்ள விவாசாயிகள் அனைத்தும் அறிந்தவர்கள் என்று கூறிய அவர் பாஜக சார்பாக டிசம்பர் 8 ஆம் தேதி முதல் விழிப்புணர்வு கூட்டம் மாவட்டம் வாரியாக நடைபெறும் என்று கூறினார். 

தற்போது ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம் அந்த வகையில் அவர் கட்சி  குறித்து மத்தியில் உள்ள பாஜக முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். பாஜகவில் இருந்து விலகி ரஜினியின் கட்சியில் அர்ஜுன மூர்த்தி இணைந்து உள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்: அவர் திமுகவில் இருந்து விலகி குறைந்த காலத்திற்கு முன்னதாகவே பாஜகவில் இணைந்தார் என்றும் பாஜக என்றும் தனி நபர் சார்ந்த கட்சி இல்லை என்று கூறினார். மேலும் அதிமுகவுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டதா என்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்: அதிமுகவுடனான கூட்டணி உறுதியா என்பதை அகில இந்திய தலைமை முடிவு செய்யும். ரஜினியுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்டவை குறித்தும் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.
 

click me!