டாஸ்மாக் கடையை இழுத்து மூடுங்க... மதுவிலக்கை அமல்படுத்துங்க... எடப்பாடிக்கு பாஜக அதிரடி யோசனை..!

By vinoth kumarFirst Published Apr 28, 2020, 6:56 PM IST
Highlights

மதுவால் குடும்பங்கள் சீரழிக்கின்றன. ஆண்மை பறிபோகிறது. தகுந்த தலைவன் இல்லாத குடும்பம் தத்தளிக்கிறது. பெண்கள் தங்கள் உழைப்பால் மட்டுமே குடும்பத்தை நடத்தும் அவலநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகிறது" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியம் என்பதை கொரோனா ஊரடங்கு நிரூபித்துள்ளது என தமிழக பாஜக தலைவர் முருகன் கூறியுள்ளார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக அரசு நடத்தும் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் மது கிடைக்காமல் சிலர் உயிரிழந்த சம்பவங்கள் ஏற்பட்டாலும் நாளடைவில் மது இல்லாமலே சிலர் வாழ்ந்து வருகின்றனர். ஒரு பக்கம் ஊரடங்கை காரணமாக கொண்டு கள்ளச்சாராய வியாபாரங்களும் தலைதூக்கியுள்ளது. இதனிடையே, மே 3ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படக் கூடாது என பாமக  உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இதே கருத்து தமிழக பாஜக தலைவர் முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில், “மதுவால் குடும்பங்கள் சீரழிக்கின்றன. ஆண்மை பறிபோகிறது. தகுந்த தலைவன் இல்லாத குடும்பம் தத்தளிக்கிறது. பெண்கள் தங்கள் உழைப்பால் மட்டுமே குடும்பத்தை நடத்தும் அவலநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகிறது" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால், மதுவிலக்கை அமல்படுத்தினால் மதுவுக்கு அடிமையானவர்கள் பாதிக்கப்படுவார்கள், கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்றெல்லாம் கூறி நடைமுறைப்படுத்த மறுத்துவிடுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ள முருகன், தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு இது என்றும், இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொண்டு நிரந்தரமாக மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

click me!