அஜித், ரஜினி ரசிகர்களை தெறிக்கவிட்ட அ.தி.மு.க., தி.மு.க. பாய்ஸ்...!

By Vishnu PriyaFirst Published Mar 5, 2019, 2:51 PM IST
Highlights

இரு கட்சிகளின் தொண்டர்கள் மோதிக்கொள்வது, இரு மாஸ் நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வதும் தமிழகத்தின் தலையெழுத்து. ஒரு காலத்தில் தெருவில் மோதியவர்கள், சமீபமாய் இணையம் வழியே சோஷியல் மீடியாவில் மோதிக் கொள்கிறார்கள்.

இரு கட்சிகளின் தொண்டர்கள் மோதிக்கொள்வது, இரு மாஸ் நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வதும் தமிழகத்தின் தலையெழுத்து. ஒரு காலத்தில் தெருவில் மோதியவர்கள், சமீபமாய் இணையம் வழியே சோஷியல் மீடியாவில் மோதிக் கொள்கிறார்கள். 

அந்த வகையில் சமீப காலத்தில் இந்திய சினிமா வட்டாரத்தையே அதிர வைத்த ஒரு மோதலென்றால் அது பேட்ட படத்துக்காக ரஜினியின் ரசிகர்களும், விஸ்வாசம் படத்துக்காக அஜித்தின் ரசிகர்களும் நடத்திய இணைய போர்தான். இதில் இரண்டு தரப்பு ரசிகர்களும் பரஸ்பரம் தங்களைத்தாங்களே தாக்கி விமர்சித்தது மட்டுமில்லாமல், எதிர்தரப்பு ஹீரோக்களையும் மூர்க்கமாய் விமர்சித்து அசிங்கப்படுத்தினர். அளவுக்கு மீறி, அத்துமீறி, அசிங்கம் கொப்பளிக்க நடந்த இந்த மோதலை யாரும் தடுக்கவும் இல்லை, தட்டிக்கேட்கவும் இல்லை. 

வசூலுக்கு வகையாக கைகொடுக்கும் என்பதால் இந்த இரண்டு தரப்பு ரசிகர்களின் கை ஆயுதங்கள் கொம்பு சீவி விடப்பட்டதுதான் உண்மை. பேட்ட ரஜினியும், விஸ்வாசம் அஜித்தும் 50வது நாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அடுத்த ப்ராஜெக்டில் பிஸியாகிவிட்டனர். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இப்போதும் இணையதளத்தில் ஒரு போர் உச்சம் தொட்டிருக்கிறது. அது, அ.தி.மு.க. - தி.மு.க. இடையிலான போர்தான்.

 

இரண்டு கட்சிகளுமே ஐ.டி. விங்கினை வலுவாக கட்டமைத்து நடத்துகின்றனர். அதனால் இரண்டு இந்த மோதல் மிகவும் அப்டேடட் ஆகவும், மூர்க்கத்தனமாகவும் இருக்கிறது. இந்த ஐ.டி. விங்களில் இருக்கும் நபர்களின் பங்களிப்பு கூட கொஞ்சம்தான். ஆனால் இரு தரப்பு தொண்டர்களும் தங்கள் கையிலிருக்கும் ஆண்ட்ராய்ட் மொபைல்களை பயன்படுத்தி சரமாரியாக தாக்கிக் கொள்கிறார்கள். கிண்டல், நய்யாண்டித்தனம் இருக்கலாம் தப்பில்லை. ஆனால் இவர்களோ தனி மனித தாக்குதலை மிக மிக மோசமாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

தேர்தலில் கூட்டணி வைத்துள்ளதால், இந்த இணைய சண்டையிலும் கட்சிகள் தர்மத்தை கடைப்பிடிக்கின்றன. அதாவது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பி.ஜே.பி. மற்றும் பா.ம.க.வின் இணையதள டீம் சேர்ந்து ஒரு படையாகவும், எதிரில் தி.மு.க.வுக்கு ஆதரவாக வி.சி.க. இணையதள டீமும், மற்றும் காங்கிரஸின் சார்பாக சோஷியல் மீடியாவில் இயங்குவோரும் இணைந்து ஒரு படையாக மாறியுள்ளனர். நொடிக்கு நொடி மாறும், அப்டேட் ஆகும் அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்தும், தலைவர்கள் பழைய பேச்சையும் இந்நாளில் அவர்களின் முரணான நிலைப்பாட்டை வைத்தும், மேடைகள் மற்றும் பொது இடங்களில் வாய் உளறலாக தலைவர்கள் பேசுவதை வைத்தும் இரு தரப்பும் போடும் மீம்ஸ், ட்ரோல் வீடியோக்கள் ஆகியவற்றுக்கு அளவுமில்லை, அவை கொட்டும் அசிங்க அர்த்தங்களுக்கு எல்லையுமில்லை. 

ஒரு தரப்பு எதிர்கட்சியின் பெண் தலைவர்களை அசிங்கப்படுத்திய அடுத்த நிமிடத்தில் இந்த தரப்பு எதிர் டீமின் பெண் தலைவர்களை பற்றி மோசமாக சித்தரிக்கிறது. கிராபிக்ஸ் உத்திகளைப் பயன்படுத்தி தலைவர்கள், தலைவிகளின் போட்டோக்களை வித்தியாச வித்தியாசமாகவும், அருவெறுப்பாகவும், ஆக கேடாகவும் வடிவமைத்து இணையத்தில் பரப்புகிறார்கள்.

கட்டிங், வெட்டிங், ஒட்டிங் முறையைப் பயன்படுத்தியும் பல ஆபாச அக்குறும்புகளைப் பண்ணுகிறார்கள். பொய்யான தகவல்களை பரப்புவதை கூட சகிக்கலாம், ஆனால் போட்டோ வழியாக நடக்கும் சேதாரங்கள்தான் மிக மோசமாக இருக்கின்றன. இவற்றை பார்த்தாலே பயங்கரமாகவும், வாசித்தால் வாந்தி வருமளவுக்கும் வார்த்தை மற்றும் காட்சிப் பிரயோகங்கள் உள்ளன. யாருக்கும் ஷேர் செய்துவிட்டால், அவர்களோ நாம் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுமளவுக்கு மரண மோசமாக திட்டுமளவுக்குதான் போட்டோக்கள் அமைகின்றன பல நேரங்களில். இவற்றைப் பார்த்து ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களோ ‘இவனுங்களுக்கு நாம எவ்வளவோ பரவாயில்லை.’ என்று தேற்றிக் கொள்கிறார்கள். இந்த அசிங்க அரசியல் எடுபிடிகளுக்கு செக் வைப்பது யார்?

click me!