
யார் தனிக்கட்சி தொடங்கினாலும் கவலையில்லை எனவும் உண்மையான அதிமுக தொண்டர்கள் எப்போதும் தங்களுடன் இருப்பார்கள் எனவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை கைப்பற்றப்போவதாக கூறிவந்த டிடிவி.தினகரன், திடீரென தனிக்கட்சி தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை நீக்க சட்டரீதியான போராட்டம் தொடர்வதாகவும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக காலமதாமதம் ஆகும் என்பதால் அதற்கு முன்னதாக வரவுள்ள உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை எதிர்கொள்ள வசதியாக தனிக்கட்சி குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுவதாகவும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு தனிக்கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் தங்களின் பின்னால் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், யார் தனிக்கட்சி தொடங்கினாலும் கவலையில்லை எனவும் உண்மையான அதிமுக தொண்டர்கள் எப்போதும் தங்களுடன் இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்தாலும், அதிமுகவிலிருந்து யாரும் வெளியேறமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.