
உற்சாகமாக வரவேற்ற அதிமுக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச் சாவடி ஒன்றில் திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக வந்த தகவலையடுத்து அந்த பகுதிக்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நரேஷ் என்கிற திமுக பிரமுகரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளால் சிறையில் இருந்து வெளியே வருவதில் ஜெயக்குமாருக்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து 19 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது இதையடுத்து சிறையில் இருந்து வெளிய வந்த ஜெயக்குமாருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தினந்தோறும் சந்திக்கும் தொண்டர்கள்
இதனையடுத்து சிறையில் இருந்து பட்டினம்பாக்கம் வீட்டிற்கு சென்ற ஜெயக்குமாருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தனர். அப்போது தன்னை கைது செய்து சிறையில் வைத்த நிலையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியற்கு ஜெயக்குமார் நன்றி தெரிவித்துக்கொண்டார். இதையடுத்து திருச்சிக்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஏற்பாடு செய்து வருகிறார். இந்தநிலையில் தினந்தோறும் காலையிலும் மாலையிலும் என நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் ஜெயக்குமாரை சந்தித்து வருகின்றனர்.
மதியம் உணவு அதிமுக நிர்வாகிகள் சார்பாக ஓட்டலுக்கே கொண்டு வரப்பட்டு கொடுக்கப்பட்டது. இதனை மறுத்த ஜெயக்குமார் தங்கள் பகுதிக்கே வருகிறேன் என கூறி தொண்டர்களோடு சென்று உணவு அருந்தி வருகிறார். அந்த பகுதிக்கு செல்லும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் மலர் தூவி வரவேற்று வருகின்றனர்.
உற்சாகத்தில் ஜெயக்குமார்
திருச்சி மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற உத்தரவு இருப்பதன் காரணமாக திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு தினந்தோறும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் செல்கிறார். அங்கு அதிமுக தொண்டர்களை சந்தித்து கட்சி நிலவரம் தொடர்பாகவும், தேர்தல் தோல்வியால் துவண்டு போய் உள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தியும் பேசி வருகிறார். மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட மணப்பாறை பகுதிக்கு சென்ற ஜெயகுமார் அங்கு மணப்பாறை முறுக்கு பிழிந்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது அருகிலிருந்த மற்றொரு முன்னாள் அமைச்சராக பரஞ்சோதி, இப்படி நீங்க உற்சாகமாக இருப்பதை திமுக அரசு பார்த்தால் அவ்வளவு தான் அடுத்த முறை சென்னையிலேயே இருக்க வைத்து விடுவார்கள் என நகைச்சுவையாக கூறினார். இந்தநிலையில் தினந்தோறும் தொண்டர்கள் தன்னை வந்து சந்திப்பது மேலும் உற்சாகப்படுத்துவதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ஜெயக்குமாரை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் பல்வேறு மாவட்ட தொண்டர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருவது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.