
நேற்று இரவு வரை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்துவந்த திண்டுக்கல் மாநகராட்சி 1-வது வார்டு அதிமுக வேட்பாளர் முத்துப்பாண்டி இன்று காலை திடீரென அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது அதிமுகவினரை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. அதே நேரத்தில் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனமும் அரசுக்கு எதிராக இருந்து வருகிறது. இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வாக்குப்பதிவுக்கு இரண்டு தினங்களே உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் அதிமுக திமுகவுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக பாமக ஆகிய கட்சிகள் தனித்து தேர்தலை சந்திக்கின்றன. இது திமுகவுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் தனித்து தேர்தலை சந்திக்கின்றன. இது ஒரு மினி சட்டமன்றத் தேர்தலாக கருதப்படுவதால் தங்களின் பலத்தை நிரூபிப்பதற்கான முயற்சியில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த தேர்தலில் பல்முனை போட்டி நிலவுவதால் வழக்கத்துக்கு மாறாக தேர்தல் களம் வெப்பமடைந்துள்ளது. அதே நேரத்தில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சி வேட்பாளர்கள் தாவுவதும், தங்களது வெற்றி வாய்ப்புக்கு இடையூறாக இருக்கும் வேட்பாளர்களை சரிக்கட்டும் Local Understanding அரசியலும் படு ஜோராக நடந்து வருகிறது. சமீபத்தில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேமுதிக வேட்பாளர் திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற நிகழ்வுகள் தமிழக அளவில் பரவலாகவே நடந்து வருகிறது.
இது ஒருபுறம் காட்சித் தலைமைகளுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தினாலும் மறுபுறம் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாகவே நடந்து வருகிறது. தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டம்தோறும் அனல்பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
துரைமுருகன், கே.என் நேரு, ஏவா வேலு போன்ற சீனியர் அமைச்சர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் அதிமுக திமுக இடையே மோதல் கடுமையாக இருந்து வரும் நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி 1வது வார்டு அதிமுக வேட்பாளர் முத்துப்பாண்டி என்பவர் திடீரென திமுகவில் இணைந்துள்ளார். நேற்று இரவு வரை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவர் திடீரென இன்று காலை அமைச்சர் ஐ. பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். வாக்குப் பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்திருப்பது அதிமுகவினரை மட்டுமல்ல அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் இபிஎஸ், ஓபிஎஸ்சை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.