அதிமுகவில் தொடரும் குழப்பம்...வேட்பாளர் பெயரை அறிவிக்க முடியாமல் சிக்கல்..! காரணம் என்ன?

By Ajmal KhanFirst Published May 22, 2022, 9:29 AM IST
Highlights

மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுகவில் கடும் போட்டி நிலவுவதால் தொடர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில் இன்று வேட்பாளர் பெயர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
 

ஜூன் 10 மாநிலங்களவை தேர்தல்

நாடு முழுவதும் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனையடுத்து தமிழத்தில் உள்ள கட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதன் படி  திமுக சார்பாக 4 பேரையும் அதிமுக சார்பாக 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஏற்கனவே திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் கடும் போட்டி

இந்தநிலையில் அதிமுக சார்பாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை கழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க தீவிரமாக ஆலோசிக்ப்பட்டது. இதில் எந்தவித முடிவும் ஏற்படாமல் கூட்டம் முடிவடைந்தது. அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள 2  இடங்களுக்கு முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டியிட்டு வருகின்றனர். எனவே யாருக்கு வாய்ப்பு அளிப்பது என்பதில் தொடர் குழப்பம் ஏற்பட்டது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து ராஜ் சத்யனுக்கு  வாய்ப்பு வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இன்று பட்டியல் வெளியாக வாய்ப்பு

அதே நேரத்தில் மற்றொரு இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தனது சகோதரர் சி.வி. ராதாகிருஷ்ணனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்பதாக கூறப்படுகிறது. இன்பதுரையும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக யாருக்கு கொடுப்பது என்பது தெரியாமல் அதிமுக மூத்த நிர்வாகிகள் உள்ளனர். வருகிற 24 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தொடங்க உள்ள நிலையில் இன்று அதிமுக வேட்பாளர்களின் பெயர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

click me!