ரொம்ப ஓவாரா போறீங்க.. அப்பறம் உங்க பதவிக்குதான் ஆபத்து? எல்.முருகனை எச்சரிக்கும் அதிமுக...!

By vinoth kumarFirst Published Dec 20, 2020, 11:03 AM IST
Highlights

அதிமுக - பாஜக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் எல்.முருகன் செயல்படுகிறார் என அதிமுகவின் செய்திதொடர்பாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்

அதிமுக - பாஜக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் எல்.முருகன் செயல்படுகிறார் என அதிமுகவின் செய்திதொடர்பாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்து தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில். அதிமுக – பாஜக கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். ஆனால், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டது குறித்து தமிழக  பாஜக தலைவர் எல்.முருகன் ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுகவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் வகையில் மாநில பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வரும் சட்டமன்றத் தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும். ஆனால் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது, யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை தான் முடிவு செய்யும். எனது தலைமையிலான வேல் யாத்திரை மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கி விட்டேன் என்று கூறினார். இவரது பேச்சு அதிமுக அமைச்சர்களை கடுப்பேற்றியது. இதற்கு பதிலடியும் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுகவின் செய்திதொடர்பாளர் புகழேந்தி;- அதிமுக - பாஜக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் எல்.முருகன் செயல்படுகிறார். எல்.முருகனுக்கு அவருடன் இருப்பவர்களாவது அறிவுரை வழங்க வேண்டும். முதல்வர் சிறப்பாக செயல்படுவதாக பிரதமரே பாராட்டிய நிலையில் முருகனின் கருத்து மோடிக்கு எதிராக உள்ளது. குழப்பம் விளைவிக்கும் கருத்துகளை கூறினால் முருகனை மாற்ற பாஜக மேலிடம் முடிவு எடுக்க வேண்டிவரும் என புகழேந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

click me!